/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் தகுதியில்லாத பஸ் ஸ்டாண்டின் விண்ணப்பம் நிராகரிப்பு 7 மாதமாக சரி செய்யமுடியாத அவலம்; ரூ.26.25 லட்சம் இழப்பு
/
ஓசூரில் தகுதியில்லாத பஸ் ஸ்டாண்டின் விண்ணப்பம் நிராகரிப்பு 7 மாதமாக சரி செய்யமுடியாத அவலம்; ரூ.26.25 லட்சம் இழப்பு
ஓசூரில் தகுதியில்லாத பஸ் ஸ்டாண்டின் விண்ணப்பம் நிராகரிப்பு 7 மாதமாக சரி செய்யமுடியாத அவலம்; ரூ.26.25 லட்சம் இழப்பு
ஓசூரில் தகுதியில்லாத பஸ் ஸ்டாண்டின் விண்ணப்பம் நிராகரிப்பு 7 மாதமாக சரி செய்யமுடியாத அவலம்; ரூ.26.25 லட்சம் இழப்பு
ADDED : அக் 20, 2024 04:05 AM
ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் திருப்பி அனுப்பிய போக்குவரத்து துறை அதிகாரிகள், 'தகுதியில்லாத பஸ் ஸ்டாண்ட்' என்ற அடிப்படையில் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர். கடந்த, 7 மாதமாக அடிப்படை வசதி ஏற்படுத்தாத காரணத்தால், 26.25 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இதுதவிர அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படுகின்றன. தினமும், 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு சுத்தமான கழிவறை, குடிநீர், இருக்கைகள், லக்கேஜ் அறை, பஸ்கள் வந்து செல்லும் நேர அட்டவணை போன்ற வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஓசூர் வட்டார போக்குவரத்துத்துறையிடம் பஸ் ஸ்டாண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் விண்ணப்பிக்க வேண்டும்.
பயணிகளுக்கான வசதிகள் சரியாக உள்ளதா என வட்டார போக்குவரத்துறை ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி, அவர் மூலம் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும். அதன் பின் தான், ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கான டெண்டரை மாநகராட்சி அறிவிக்க முடியும்.
விண்ணப்பம் நிராகரிப்பு
கடந்தாண்டு பஸ் ஸ்டாண்ட் அங்கீகாரத்தை புதுப்பித்த மாநகராட்சி நிர்வாகம், பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யும் உரிமையை, 3 ஆண்டுகளுக்கு தனி நபருக்கு வழங்கியது. டெண்டர் எடுத்த தொகையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக, 5 சதவீதம் செலுத்தி, தனி நபர் டெண்டரை புதுப்பிக்க வேண்டும். அதேபோல், பஸ் ஸ்டாண்ட் அங்கீகாரத்தை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பிக்க வேண்டும்.
நடப்பாண்டு பஸ் ஸ்டாண்டிற்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க, கடந்த மார்ச் மாதம் வட்டார போக்குவரத்துத்துறைக்கு, அப்போதைய மாநகராட்சி கமிஷனர் சினேகா உத்தரவின்படி அலுவலர்கள் விண்ணப்பித்தனர். ஆனால், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் கழிவறைகள் பராமரிப்பில்லை; குடிநீர் வசதி, பயணிகள் இருக்கை உள்ளிட்ட அடிப்படி வசதிகள் இல்லை; பஸ் கால அட்டவணை போன்றவை இல்லை என கூறி, விண்ணப்பத்தை வட்டார போக்குவரத்துத்துறை திருப்பி அனுப்பியது. அதாவது, 'தகுதியில்லாத பஸ் ஸ்டாண்ட்' என்ற அடிப்படையில் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
ரூ.26.25 லட்சம் இழப்பு
அதனால், நடப்பாண்டு பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யும் டெண்டர் ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பிக்க முடியாமல் போனது. எனவே, டெண்டர் எடுத்த நபர் இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கூடுதல் தொகை, 26.25 லட்சம் ரூபாயை செலுத்தவில்லை.
உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கமிஷனர் சினேகா மவுனமாக இருந்ததால், அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட டெண்டர் எடுத்தவர், ஒப்பந்தம் புதுப்பிக்காத போதும் கடந்த, 7 மாதமாக பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்து, பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
இதை ஆய்வின் மூலம் தற்போதைய மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் கண்டறிந்துள்ளார். ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை என்பதை, புதிய கமிஷனர் ஸ்ரீகாந்திடம், மாநகராட்சி அலுவலர்கள் மறைத்துள்ளார். பஸ் ஸ்டாண்டில் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு வட்டார போக்குவரத்துத்துறை கூறியும், இதுவரை மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் அக்கறை காட்டாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். அதனால், இதுவரை டெண்டர் புதுப்பிக்கப்படாமல், மாநகராட்சிக்கு இந்த ஆண்டு மட்டும், 26.25 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கவுன்சிலர்கள் அதிருப்தி
இது குறித்து கமிஷனர் ஸ்ரீகாந்திடம் கேட்ட போது, ''பஸ் ஸ்டாண்டிற்கான அங்கீகாரம் புதுப்பிக்கபடவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. என் கவனத்துக்கு கொண்டு வரவும் இல்லை. உதவி கமிஷனரிடம் பேசுங்கள்,'' என்றார்.
உதவி கமிஷனர் டிட்டோவிடம் கேட்ட போது, ''வட்டார போக்குவரத்துத்துறை சில குறைகளை சுட்டி காட்டியுள்ளது. அதை இன்ஜினியரிங் பிரிவில் தெரிவித்துள்ளோம். அதை சரி செய்து விட்டால் அங்கீகாரத்தை புதுப்பித்து விடலாம்,'' என்றார்.
பஸ் ஸ்டாண்ட் அங்கீகாரத்தை புதுப்பிக்க, 7 மாதம் கடந்தும் கூட, மாநகராட்சி அலுவலர்கள் அக்கறை காட்டாது, ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இப்பிரச்னை வரும் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
2 கடைகளுக்கு மட்டும் ரூ.60 லட்சம் வாடகை பாக்கி
ஓசூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை, மாநகராட்சி நிர்வாகம் வாடகைக்கு விட்டுள்ளது. இதில், 14 கடைகள் மெயின் கடைகளாகும். அவற்றுக்கு மாதம், 55,000 முதல், 70,000 ரூபாய் வரை மாநகராட்சி வாடகை வசூலிக்கிறது. குறிப்பாக, 6 ம் நம்பர் கடைக்கு, 55,000 ரூபாய்க்கு மேலாகவும், 7 ம் நம்பர் கடைக்கு, 70,000 ரூபாய்க்கு மேலாகவும் மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கடைகள், 60 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மாநகராட்சி சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஒருவர் வாடகை பாக்கியை வசூல் செய்யவில்லை. இரு கடைகளும் ஒன்றரை ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள போதும், மாநகராட்சி கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்று மறு ஏலம் விட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாநகராட்சி வருவாய் இழப்பு ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டு வருகிறது.