/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானை தாக்கி விவசாயி பலி உறவினர்கள் சாலை மறியல்
/
யானை தாக்கி விவசாயி பலி உறவினர்கள் சாலை மறியல்
ADDED : அக் 30, 2025 03:14 AM
தேன்கனிக்கோட்டை:  தேன்கனிக்கோட்டை அருகே, யானை தாக்கி விவசாயி பலியான நிலையில், உறவினர்கள், மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, 65, விவசாயி; நேற்று மாலை, 5:00 மணிக்கு, வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆடு வனப்பகுதிக்குள் சென்றதால், அதை தேடி சென்றவரை, வனத்திற்குள் சுற்றிய ஒற்றை யானை தாக்கியதில் பலியானார்.
யானைகளால் தொடர்ந்து உயிர் பலி ஏற்படும் நிலையில், அவற்றை விரட்டாத வனத்துறையை கண்டித்தும், விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், கிருஷ்ணப்பாவின் உறவினர்கள், கொத்துார் பஸ் ஸ்டாப் அருகே மாலை, 6:30 மணி முதல் விவசாயி சடலத்துடன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி., ஆனந்தராஜ், ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி ஆகியோர் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் இரவு, 8:30 மணிக்கு மேல் போராட்டம் முடிவுக்கு வந்தது. மறியலால், தேன்கனிக்கோட்டை - அஞ்செட்டி சாலையில், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

