/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மா'விற்கு விலை நிர்ணயம் முதல்வர் தலையிட கோரிக்கை
/
'மா'விற்கு விலை நிர்ணயம் முதல்வர் தலையிட கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2025 01:05 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், எஸ்.மோட்டூர் கிராமத்தில், 'மா' விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
விவசாயி முருகேசன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் ஆலோசனை வழங்கி பேசினார்.
கூட்டத்தில், 2வது முத்தரப்பு கூட்டத்தில், 'மா' விலை நிர்ணயம் செய்யாமல் கூட்டம் முடிந்தது. மாவட்ட கலெக்டர், கர்நாடகா, ஆந்திரா ஆதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விலை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதாக உறுதியளித்தார்.
ஆனால், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'மா' உற்பத்தியாளர்களையும், மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களையும் அழைத்துப்பேசி ஒரு டன் மாங்காயை, 13,000 ரூபாய்க்கு குறையாமல் கொள்முதல் செய்ய முடிவெடுத்ததால், ஆந்திரா மாங்காய் தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் இல்லை.
தமிழக முதல்வர், இதில் தலையிட்டு, ஆந்திராவை போல் இங்கும் டன்னுக்கு, 13,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், மாவட்டத்தில் இயங்காமல் உள்ள, 50க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து இயங்க வைத்தால், 'மா'விற்கான விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், குளிர்பானம் உற்பத்தியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது போல், மாங்கூழ் தொழிற்சாலை அதிபர்களுடன் இணைந்து பணியாற்ற, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
தமிழக அரசு இதில் தலையிடவில்லை என்றால், விவசாயிகள் மிகப்பெரிய இழப்பையும், நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும், என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.