/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திட்டங்களை துவக்கி வைக்க எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட முனுசாமி
/
திட்டங்களை துவக்கி வைக்க எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட முனுசாமி
திட்டங்களை துவக்கி வைக்க எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட முனுசாமி
திட்டங்களை துவக்கி வைக்க எதிர்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட முனுசாமி
ADDED : செப் 11, 2024 11:32 AM

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே திட்டங்களை துவக்கி வைக்க சென்ற அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., திட்டங்களை துவக்கி வைக்க கூடாது என தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் முனுசாமி தலைமையில் அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி, கும்பளம் பஞ்., குட்பட்ட பகுதியில், 'பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா' திட்டத்தில், 6.63 கி.மீ., தூரத்திற்கு 5.36 கோடி ரூபாய் மதிப்பிலும், சின்னார்தொட்டி பஞ்.,குட்பட்ட சிகரலப்பள்ளி- சின்னார்தொட்டி வரை குப்பம் ஏரி கால்வாய்க்கு சிறுபாலம் அமைக்க 2.29 கோடி என மொத்தம், 7.65 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்க இன்று காலை அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும் வேப்பனஹள்ளி சட்டசபை எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி சென்றார்.
சாலையின் இருபுறமும் அ.தி.மு.க., கொடிகளை கட்சியினர் கட்டி வைத்து அவரை வரவேற்க தயாராகினர். இந்நிலையில், 'தி.மு.க., ஆட்சியில் நடக்கும் திட்டங்களை துவக்கி வைக்க தி.மு.க.,வினரே வரவேண்டும். முனுசாமி எதற்காக வருகிறார்,' எனக் கூறி தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த முனுசாமி எம்.எல்.ஏ., 'இது என் தொகுதி நான் திட்டப் பணிகளை துவக்க கூடாதா' என கேட்டபோது, 'நடப்பது தி.மு.க., ஆட்சி. திட்டங்களை தி.மு.க.,வினர் தான் துவக்கி வைக்க வேண்டும்,' எனக்கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தி.மு.க.,- அ.தி.மு.க.,வினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ராமன் தொட்டி கேட் அருகே வேப்பனஹள்ளி- பேரிகை சாலையில் அமர்ந்த முனுசாமி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மறியல் நடந்த இடத்திற்கு சென்றார். சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு, வேப்பனவள்ளி ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், காவேரிபட்டணம் ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் ஓசூர் ஏ.எஸ்.பி., அக்சய் அணில் தலைமையிலான போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சாலை மறியல் கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து தி.மு.க.,வினரும் எதிர் திசையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கலைத்தனர்.