/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய்த்துறை சங்கத்தினர் தர்ணா போராட்டம்
/
வருவாய்த்துறை சங்கத்தினர் தர்ணா போராட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி, வருவாய்த்துறையை சிறப்பு துறையாக அறிவித்து, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரியில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை சங்கத்தினர் பேரணியாக, பெங்களூரு சாலை வழியாக, கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வரை சென்றனர். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில அளவை துறையில் பணிந்து வரும் அனைத்து அலுவலர்களுக்கும் உயிர் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கருணை அடிப்படை பணி நியமத்திற்கான உச்சவரம்பை, 25 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதியை வருவாய் துறை தினமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில துணைச்செயலாளர் பெருமாள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பூபதி மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* தற்செயல் விடுப்பு போராட்டத்தையொட்டி நேற்று ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் திறக்கப்படவில்லை. இதனால், பல்வேறு பணிகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.