/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
/
வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
ADDED : நவ 27, 2024 01:00 AM
கிருஷ்ணகிரி, நவ. 27-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், 3ம் கட்டமாக பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, மாவட்ட துணைத்தலைவர் குமரேசன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் பிரதாப், தாசில்தார்கள் வளர்மதி, வடிவேல், சகாதேவன், பூவிதன் ஆகியோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பை, 5 சதவீதமாக குறைத்துள்ளதை ரத்து செய்து மீண்டும், 25 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கும் நடவடிக்கையை அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
* தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், மூன்றாம் கட்டமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி தாலுகா அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் முதல், தாசில்தார் வரை நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு
ஆளாகினர்.