/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரியில் 'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 100 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000
/
கி.கிரியில் 'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 100 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000
கி.கிரியில் 'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 100 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000
கி.கிரியில் 'அன்புக்கரங்கள்' திட்டத்தில் 100 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000
ADDED : செப் 16, 2025 01:55 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், 'அன்புக்கரங்கள்' திட்டத்தில், 100 குழந்தைகளுக்கு மாதாந்திர தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது என, கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு, 'அன்புக்கரங்கள்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ-.,க்கள் மதியழகன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், 'அன்புக்கரங்கள்' திட்ட பயனாளிகள், 100 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கி பேசியதாவது:
இத்திட்டத்தில், தனியாக வசிக்கும் ஆதரவற்றோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநல பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் போன்ற வரிய நிலையில் வாழும் குழந்தைகளுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் பயன்பாடு போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
மேலும், இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக உதவித்தொகை செலுத்தப்படும். இதேபோல் இரு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு அவர்களின், 18 வயது வரை மாதந்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது, 'அன்புக்கரங்கள்' திட்டத்தில், பெற்றோர் இருவரும் இழந்த, 55 குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின், 9 குழந்தைகள், பெற்றோர் ஒருவரை இழந்து சிறைவாசி பெற்றோர்களின், 2 குழந்தைகள், பெற்றோர் ஒருவரை இழந்து கைவிடப்பட்ட பெற்றோர்களின், 20 குழந்தைகள், பெற்றோர் ஒருவரை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பெற்றோர்களின், 14 குழந்தைகள் என மொத்தம், 100 குழந்தைகளுக்கு மாதாந்திர தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.