/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் ரசாயன நுரையால் மூழ்கும் தரைப்பாலம்
/
ஓசூரில் ரசாயன நுரையால் மூழ்கும் தரைப்பாலம்
UPDATED : நவ 07, 2024 10:59 AM
ADDED : நவ 07, 2024 05:52 AM
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணை எதிரே உள்ள தரைப்பாலம் ரசாயன நுரையால், அவ்வப்போது மூழ்குகிறது. அங்கு, உயர்மட்ட பாலம் அமைக்க, நீர்வளத்துறை நிதியில்லை என கூறிய நிலையில், மாவட்ட கலெக்டர் மனது வைத்தால் மட்டுமே, அது முடியும் எனும் நிலை உருவாகி உள்ளது.
கர்நாடகாவிலிருந்து வரும் தென்பெண்ணையாற்றில், சுத்திகரிக்காத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் திறந்து விடப்படுவதால், மாசடைந்த நீர் ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு வருகிறது. அந்த நீரை தென்பெண்ணையாற்றில் திறக்கும்போது, ரசாயன நுரை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 4,000 கன அடிக்கு மேல் நீர் திறக்கும்போது, அதிகளவில் ரசாயன நுரை ஏற்பட்டு, கெலவரப்பள்ளி அணை எதிரே, ஆற்றின் குறுக்கே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தின் மீது, பல அடி உயரத்திற்கு, ரசாயன நுரை படர்கிறது. அந்நேரங்களில் தட்டகானப்பள்ளி, நந்திமங்கலம், முத்தாலி, சின்ன முத்தாலி, சித்தனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு, அரசு பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முடங்கி போக்குவரத்து துண்டிக்கப்படும். 10 கி.மீ., துாரத்திற்கு மேல், வாகன ஓட்டிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
அதனால், தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பாலம் மற்றும் அதன் இருபுற சாலைகள், நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளதால், மாநில நெடுஞ்சாலைத்துறை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடியாது. புதிய பாலம் அமைக்க நீர்வளத்துறையிடம் நிதி இல்லை. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக நிதியுதவி பெற்றுத்தான், உயர்மட்ட பாலம் அமைக்க முடியும்.
அதற்கு, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட வேண்டும். அப்போது தான், உள்ளாட்சி அமைப்பு மூலம் உயர்மட்ட பாலம் கட்ட முடியும். தட்டகானப்பள்ளி தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்தால், அதிகளவு நீர் செல்லும் போதும், ரசாயன நுரையால் போக்குவரத்து பாதிக்காது. எனவே, மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட கலெக்டர் செவி சாய்க்க வேண்டும் என்பதே, மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தட்டகானப்பள்ளி தரைப்பாலம் அமைத்து பல ஆண்டுகளானதால், அதன் உறுதித்தன்மை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. மேலும், தரைப்பாலத்தின் ஒருபுறத்தில் சேதமான தடுப்பு கம்பிகளை கூட சீரமைக்க நிதியில்லை. அதனால், உள்ளாட்சி அமைப்புகள் தான், எங்களிடம் தடையின்மை சான்று பெற்று, பாலம் அமைக்க வேண்டும்' என்றனர்.