/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மலைகளை குடைந்து கற்கள் திருட்டு: அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு
/
மலைகளை குடைந்து கற்கள் திருட்டு: அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு
மலைகளை குடைந்து கற்கள் திருட்டு: அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு
மலைகளை குடைந்து கற்கள் திருட்டு: அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு
ADDED : நவ 26, 2025 07:23 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வட்டத்தில், உடைகற்கள் மற்றும் பென்சிங் கற்கள் வெட்டி எடுக்க, மேல்பட்டி, மெட்டுப்பாறை, ஆத்துக்காவாயில் ஆகிய பகுதிகளில் ஐந்து இடங்களில் குவாரிகள் ஏலம் விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள பாறைகளில், நவீன இயந்திரங்கள் மூலம் சிலர், கற்களை வெட்டி கடத்துவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குவாரி ஏலம் எடுத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில், ஐந்து குவாரிகளை, பலர் இணைந்து ஏலம் எடுத்து நடத்துகிறோம். எங்கள் குவாரிகளில், இயந்திரங்களை பயன்படுத்தி, கற்களை அறுத்தால் வழக்கு பதிகின்றனர். ஆனால், பொக்லைன், லாரியுடன் நவீன இயந்திரங்களை வைத்து, ரோப் கட்டிங் மூலம் மலையின் பின்புறம் கற்களை அறுத்து மலையையே குடைந்துள்ளனர்.
அம்மலையில், கற்கள் வெட்ட அனுமதியில்லை. ஆனால், அந்த மலையின் பின்புறம் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பாறைகளில் இயந்திரங்கள் மூலம், பல அடி ஆழத்திற்கு தோண்டி எடுத்துள்ளனர்.
ஏலம் எடுத்த நாங்கள் ஏலத்தொகை, இ-பாஸ், தொழிலாளர்கள் ஊதியத்துடன் ஒரு லாரி லோடு பர்மிட்டுக்கு, 14,000 ரூபாய் செலுத்துகிறோம். ஆனால், கற்களை கடத்துபவர்கள், அதிகாரிகளுக்கு, சில ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, கற்களை கடத்துகின்றனர்.
பெரிய கற்களை அப்படியே வெட்டி எடுத்து, பென்சிங் கற்கள் விற்கும் இடத்திலேயே, இயந்திரம் மூலம் அறுத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு போனதுடன், குவாரிகளை ஏலம் எடுத்தோரும், பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.
மலைசந்து பின்புற பகுதிகள், மாதேப்பட்டி, கொண்டேப்பள்ளி, மூங்கில்புதுார் உட்பட பகுதிகளில், தினமும் பல டன் கற்கள் வெட்டி கடத்தப்படுகின்றன. அதிகாரிகள் பெயரளவுக்கு மட்டுமே வழக்கு பதிகின்றனர். அவர்களை கேட்டால், அப்பகுதி அனைத்து கட்சி பிரமுகர்களும் எங்களை மிரட்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறுகையில், ''இதை கண்காணிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு யார் நஷ்டம் ஏற்படுத்தினாலும், ஏற்றுக்கொள்ள முடியாது, முறையாக விசாரிக்கப்படும்,'' என்றார்.

