/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரு கைகளை இழந்த மாணவன் 471 மதிப்பெண் பெற்று சாதனை
/
இரு கைகளை இழந்த மாணவன் 471 மதிப்பெண் பெற்று சாதனை
இரு கைகளை இழந்த மாணவன் 471 மதிப்பெண் பெற்று சாதனை
இரு கைகளை இழந்த மாணவன் 471 மதிப்பெண் பெற்று சாதனை
ADDED : மே 09, 2025 01:02 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த ஜீனுாரை சேர்ந்தவர் கீர்த்தி வர்மா, 18; குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சிறுவயதில் ஏற்பட்ட மின் விபத்தில், இவரது இரு கைகளும் முழங்கை அளவில் எடுக்கப்பட்டது. இவரது இடது காலில் மூன்று விரல்கள் அகற்றபட்டன.
கைகள் இல்லாத நிலையிலும் எழுதுவது, ஓவியம் வரைவதுடன், பள்ளியில் முதல் மாணவராக திகழ்ந்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 437 மதிப்பெண்கள் பெற்றார். இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் நடிகர் விஜய் வரை அப்போது பாராட்டினர்.
நடப்பாண்டில், சொல்வதை எழுதுபவர் துணையுடன் தேர்வை சந்தித்த மாணவர், 600க்கு, 471 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்து கீர்த்தி வர்மா கூறியதாவது:
பி.இ., ரோபோடிக்ஸ் படிக்க ஆசை. அதற்கு எனக்கு கைகள் மீண்டும் கிடைக்கும் வகையில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய தமிழக அரசு உதவ வேண்டும். நான் பத்தாவது படித்தபோதே பலர் என்னிடம் இதுகுறித்து பேசினர். 'உனக்கு 18 வயது ஆனவுடன் ஆப்பரேஷன் வாயிலாக கைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்' என்றனர். என் கைகளை சீரமைக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவரின் வீட்டிற்கு சென்ற மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், அவருக்கு வாழ்த்து தெரிவித்து, 'என்ன லேப்டாப் பிடிக்கிறதோ கேள்; வாங்கி தருகிறேன். உயர்கல்விக்கும் உதவி செய்யப்படும். உன் கைகளை சீரமைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய சுகாதார அலுவலர்கள் வந்துள்ளனர். தமிழக அரசு துணையோடு, உன் கைகள் சீரமைக்கப்படும்' என்றார்.

