/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு அருங்காட்சியகத்துக்கு மாணவியர் களப்பயணம்
/
அரசு அருங்காட்சியகத்துக்கு மாணவியர் களப்பயணம்
ADDED : செப் 30, 2025 01:54 AM
கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர், அருங்காட்சியகத்திற்கு ஒரு நாள் களப்பயணம் மேற்கொண்டனர்.கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித்துறை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, கலெக்டருடன், 'மாவட்ட காலமும் வரலாறும்' என்ற தலைப்பில், கடந்த ஏப்., 21ல் கலந்துரையாடல் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணிதிட்ட மாணவியர், அரசு அருங்காட்சியகத்திற்கு ஒரு நாள் களப்பயணம் சென்றனர்.
அங்கு, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், நடுகற்கள் காட்டும், 'வாழ்வியலும் வரலாறும்' என்ற தலைப்பில் மாணவியருக்கு விளக்கம் அளித்தார். மேலும், நடுகற்களின் வகைகளான நவகண்டம், ஆநிரை கவர்தல், மீட்டல், புலிகுத்திப்பட்டான் கல், யானைகுத்திப்பட்டான் கல் மற்றும் வீரர்கள் நடுகற்கள், அதிலுள்ள கல்வெட்டுகள் கூறும் காலம், அரசர்களின் எல்லைப்பகுதி, அக்கால மக்களின் உடை, ஆபரணங்கள், ஆயுதங்கள், ஏறுதழுவுதல் நடுகற்கள், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை உறுதி படுத்தும் பீமாண்டப்பள்ளி நடுகல், கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்து முதல், 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்தமைதி பற்றியும், அவற்றை படியெடுப்பது பற்றியும் விளக்கம் அளித்தார்.
அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், ஆசிரியைகள் அம்பிகா, ஜெயந்தி, வரலாற்று ஆய்வுக்குழு பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.