/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.138 கோடியில் மேலும் ஒரு 'ரிங் ரோடு' ஓசூர் நெரிசலை தீர்க்க தமிழக அரசு புதிய திட்டம்
/
ரூ.138 கோடியில் மேலும் ஒரு 'ரிங் ரோடு' ஓசூர் நெரிசலை தீர்க்க தமிழக அரசு புதிய திட்டம்
ரூ.138 கோடியில் மேலும் ஒரு 'ரிங் ரோடு' ஓசூர் நெரிசலை தீர்க்க தமிழக அரசு புதிய திட்டம்
ரூ.138 கோடியில் மேலும் ஒரு 'ரிங் ரோடு' ஓசூர் நெரிசலை தீர்க்க தமிழக அரசு புதிய திட்டம்
ADDED : செப் 03, 2025 01:14 AM

ஓசூர்:ஓசூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேலும் ஒரு ரிங்ரோடு அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை கருத்துரு அனுப்பியுள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
அதற்கேற்ப சாலை கட்டமைப்புகள் இல்லை. அதனால், மத்திய, மாநில அரசுகள், ஓசூர் நகரை சுற்றி, பெங்களூருவை இணைக்கும் வகையில், பல்வேறு சாலை கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, தர்மபுரி - நெரலுார் சாலை, சாட்டிலைட் டவுன் ரிங்ரோடு போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.
ஓசூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சீத்தாராம்மேட்டிலிருந்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனை வரை, 8 கி.மீ., துாரத்திற்கு இன்னர் ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நகரில் நெரிசலுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் பெங்களூருவில் இருந்து வரும் வாகனங்கள், ஓசூர் நகருக்குள் வராமல், தமிழக எல்லையான ஜூஜூவாடியிலிருந்து, பேரண்டப்பள்ளிக்கு செல்லும் வகையில், ரிங்ரோடு அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு, 320 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இச்சாலையில் வரும், 11 கிராமங்களில், ஆறு கிராமங்களில் நில எடுப்பு பணி முடிந்துள்ளது. ஐந்து கிராமங்களில் நில எடுப்பு நடக்கிறது.
இதற்கிடையே, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம், பத்தலப்பள்ளியில், ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு வருகிறது.
இங்கிருந்து, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு புறநகர் பஸ்களை இயக்கும் போது, அவை ஓசூர் நகருக்குள் சென்று, குறிப்பிட்ட பகுதிக்கு சென்றால், நகரில் நெரிசல் அதிகரிக்கும்.
இப்பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும், ஓசூர் நகருக்குள் சென்று தான் செல்ல வேண்டியுள்ளது.
அதனால், பத்தலப்பள்ளி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கி, ராயக்கோட்டை சாலையில் புதிதாக கட்டப்படும் ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வழியாக, கெலமங்கலம் சாலையிலுள்ள ஜொனபெண்டா வரை, 6 கி.மீ., துாரத்திற்கு புதிய ரிங்ரோடு அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை கருத்துரு தயார் செய்து, கலெக்டருக்கு, ஒரு மாதத்திற்கு முன் வழங்கியுள்ளது.
இச்சாலைக்கு, நில எடுப்பு பணி, சாலை அமைக்க என, 138 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இச்சாலைக்கு தமிழக அரசு விரைவாக அனுமதி கொடுத்தால், நகரின் நெரிசல் கட்டுக்குள் வரும்.