/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் ரூ.338 மட்டுமே கூலி நிர்ணயித்துள்ள கலெக்டர் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சென்ற வேலைவாய்ப்பு
/
ஓசூரில் ரூ.338 மட்டுமே கூலி நிர்ணயித்துள்ள கலெக்டர் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சென்ற வேலைவாய்ப்பு
ஓசூரில் ரூ.338 மட்டுமே கூலி நிர்ணயித்துள்ள கலெக்டர் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சென்ற வேலைவாய்ப்பு
ஓசூரில் ரூ.338 மட்டுமே கூலி நிர்ணயித்துள்ள கலெக்டர் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சென்ற வேலைவாய்ப்பு
ADDED : மே 06, 2025 01:43 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மிகவும் குறைந்த கூலியை நிர்ணயம் செய்துள்ளதால், ஓசூர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணி, வெளி
மாநில மக்களுக்கு சென்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில், 90,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தினசரி, 140 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சியில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் வகையில், எல்.டி., மேன் பவர் சொல்யூசன் என்ற தனியார் நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. குப்பை சேகரிக்கும் பணிக்காக ஒவ்வொரு மாதமும், 99 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்கி வருகிறது. தனியார் நிறுவனத்தில், 550 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக துாய்மை பணியாளர்களாக வேலை செய்கின்றனர். தினசரி 114 டன் குப்பை சேகரிக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 140 டன் அளவிற்கு தனியார் நிறுவனம் குப்பை சேகரிக்கிறது. ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்துள்ளபடி, 338 ரூபாயை தினக்கூலியாக தனியார் நிறுவனம் வழங்குகிறது.
இதில், இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் போக, துாய்மை பணியாளர்களுக்கு, 290 ரூபாய் கூலியாக கிடைக்கிறது. ஓசூர் தொழில் நகரம் என்பதால், கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்றால் தினசரி குறைந்தபட்சம், 500 ரூபாய் வரை ஊதியம் பெற முடியும். ஆனால், துர்நாற்றத்திற்கு மத்தியில் பணியாற்ற, 338 ரூபாய் ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால், உள்ளூர் மக்கள் பணிக்கு வர தயங்குகின்றனர். அதனால், 500 ரூபாயாக கூலியை உயர்த்த வேண்டும் என, பொது சுகாதார குழு கூட்டம் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் இதுவரை கூலியை உயர்த்த முயற்சிக்கவில்லை.
அதனால், எல்.டி.,மேன் பவர் சொல்யூசன் நிறுவனம், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து தங்க வைத்து, குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்துகிறது. உள்ளூர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு, கூலி குறைவால் வெளிமாநில மக்களுக்கு கிடைத்து வருகிறது.
அடைப்பு நிறைந்த சாக்கடை கால்வாய்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டவுன் பஞ்.,க்களில் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதே ஊதியம் தான், ஓசூர் மாநகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கும் மாவட்ட கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓசூர் விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் மாநகராட்சியில், 160 நிரந்தர துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு குறைந்த பட்சம், 35,000 முதல், 50,000 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் குப்பையை உரமாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய அனுப்பப்படுகின்றனர்.
ஆனால், போதிய எண்ணிக்கையில் ஆட்கள் இல்லாததால், ஓசூர் மாநகராட்சியில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
நல்ல முடிவு வரும்
கூலி குறைவாக இருப்பதால், உள்ளூர் மக்கள் வேலைக்கு வர தயங்குகின்றனர். அதனால் அண்டை மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து குப்பை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சிரமத்திற்கு இடையே தான், வெளிமாநில தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். கூலியை உயர்த்த வேண்டும் என, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசிற்கு அனுப்பியுள்ளோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்துள்ளோம்.
- மாதேஸ்வரன்,

