/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'தவறிழைப்பவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க.,வில் சட்ட விதிகள் இல்லை'
/
'தவறிழைப்பவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க.,வில் சட்ட விதிகள் இல்லை'
'தவறிழைப்பவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க.,வில் சட்ட விதிகள் இல்லை'
'தவறிழைப்பவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க.,வில் சட்ட விதிகள் இல்லை'
ADDED : அக் 23, 2024 07:32 AM
கிருஷ்ணகிரி: ''தவறிழைத்து வெளியேற்றப்பட்டவர்களை, மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென, அ.தி.மு.க., சட்ட விதிகளில் இல்லை,'' என, துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையை, நேற்று பார்வையிட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, கட்சியை உடைக்க நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றவர்களை மட்டுமே வெளியேற்றியுள்ளோம். அ.தி.மு.க., ஒன்றாக இருக்கக்கூடாது என நினைத்தவர்களை மட்டுமே வெளியேற்றி உள்ளோம். அப்படி வெளியேற்றியவர்களை, மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என, அ.தி.மு.க., சட்ட விதிகளில் இல்லை.
வெளியேற்றப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் வழங்கினால், அது குறித்து கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்.,தான் முடிவெடுப்பார். சசிகலா, ஓ.பி.எஸ்., இருவரும் அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களோ, அனுபவம் இல்லாதவர்களோ இல்லை. சுயநலத்துடன் அவர்கள் சில கருத்துகளை கூறுகின்றனர். அதை தவிர்த்துவிட்டு கட்சி நலன் கருதி கருத்துக்களை கூறினால், அதற்கு பதிலளிக்கலாம்.
கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியில் டாடா, ஓலா, மைலான், டெல்டா போன்ற நிறுவனங்கள் வந்தது. தற்போது அதுபோல ஒரு தொழிற்சாலை வந்துள்ளதா. அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக இருந்தது. தற்போது வண்டல் மண்ணை திருடி பிளாட் போடுபவர்களுக்கு விற்கின்றனர். ஓட்டு வங்கிக்காக அரசாங்க பணத்தை பயன்படுத்தும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
வி.சி.க., தலைவர் திருமாவளவன் மற்றும் இணை அமைச்சர் முருகன் இடையே, அருந்ததியர் விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் கட்சியை தாண்டி, அந்த சமூகத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

