ADDED : ஏப் 20, 2025 01:27 AM
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவடிவேல் ஆகியோர், நேற்று மாலை, குமாரபாளையம், பழைய காவிரி பாலம், ரிலையன்ஸ் பங்க் அருகே, ஓலப்பாளையம் ரேஷன் கடை ஆகிய இடங்களில் லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, லாட்டரி சீட்டு விற்றதாக, கலைமகள் வீதியை சேர்ந்த கோபிநாத், 30, சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன், 53, காவேரி நகரை சேர்ந்த சீனிவாசன், 63, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளைந்து நடைமுறைப்படுத்த தீர்மானம்
நாமக்கல்:தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். செயலாளர் பழனியப்பன், தீர்மானங்களை விளக்கி பேசினார்.
மாநில துணை பொதுச்செயலாளர் அருள்மணி, இளைஞரணி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைந்து நடைமுறைப்படுத்த, நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக பெற்று வந்த ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆண்டிலேயே, மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்.
மத்திய அரசு அறிவித்த, இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வை, மாநில அரசும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் சீனிவாசன், துணை செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் சாந்தகுமார், மாவட்ட, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

