/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனமழையால் போக்குவரத்து பாதிப்பு
/
கனமழையால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 22, 2024 06:49 AM
ஓசூர் : ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை, 4:00 மணிக்கு மேல் கனமழை கொட்டி தீர்த்தது. ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால், அவ்வழியாக போலீசார் போக்குவரத்தை தடை செய்தனர்.
அதனால், தளி ரயில்வே கேட் வழியாக வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தேன்கனிக்கோட்டை சாலையில் புதிதாக அமைக்கப்படும், ரயில்வே பாலத்திற்கு அடியில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல துவங்கினர்.
அவ்வழியாக நடக்கும் பாலம் பணியால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சாலையில் கல், மண் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. கனமழையால் சேறும், சகதியுமான அவ்வழியாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே
சென்றனர்.
ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே, ஆர்.கே., நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு கனமழைக்கு சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாலையின் குறுக்கே மரம் விழுந்து கிடந்ததால், அவ்வழியாக நேற்று காலை போக்குவரத்து தடைபட்டது. மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின் போக்குவரத்து சீரானது.
குளிர்ந்த சீதோஷ்ணம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்ததால், சமாளிக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். குளிர்ந்த சீதோஷ்ண நிலை கொண்ட ஓசூர் பகுதியில் கூட வெப்ப அலை அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக கோடை மழையால், பூமி குளிர்ந்து வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பெனுகொண்டாபுரத்தில், 25.30 மி.மீ., அளவிற்கு மழை பதிவானது. தொடர்ந்து, ஓசூர் பகுதியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் தென்படவில்லை. குளிர்ந்த காலநிலை நிலவி வந்தது.

