/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி
ADDED : ஏப் 08, 2024 07:11 AM
ஓசூர் : தேன்கனிக்கோட்டை, சூளகிரியில் நடந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சரயு பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி, 3ம் நிலை அலுவலர்கள் என மொத்தம், 9,251 பேருக்கு, 2ம் கட்டமாக, அந்தந்த சட்டசபை தொகுதிகளில் நேற்று பயிற்சி நடந்தது. இதில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்; ஓட்டுப்பதிவின் போது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியை, தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சரயு பார்வையிட்டார்.
தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இயங்கும், தளி சட்டசபை தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரின் வருகை பதிவேடு, தேர்தல் குறித்து வரப்பெற்ற புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையின் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தபால் ஓட்டுப்பதிவு மையத்தை ஆய்வு செய்தார்.

