/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்களிடம் நகை பறித்த இருவருக்கு எலும்பு முறிவு
/
பெண்களிடம் நகை பறித்த இருவருக்கு எலும்பு முறிவு
ADDED : மே 14, 2025 02:13 AM
ஓசூர், ஓசூரில், பெண்களிடம் நகை பறித்து தப்பிய, 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கியதில், அவர்களின் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சிவாஜி நகர், கார்த்திகேயன் தெருவில் வசிப்பவர் வினோத் மனைவி கீர்த்தி, 31. இவர் கடந்த, 8ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, பாதாள சாக்கடையில் உங்கள் வீட்டு கழிவுநீர் குழாயை இணைக்க வந்துள்ளதாக கூறிய, 2 வாலிபர்கள், கீர்த்தியிடமிருந்து, 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர்.
அதேபோல், ஓசூர் அருகே காளஸ்திபுரம், தனியார் லேஅவுட்டில் வசிக்கும் மணியம்மாள், 62, என்பவரிடம், வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரிப்பது போல் வந்த, 2 வாலிபர்கள், மணியம்மாள் கழுத்திலிருந்த, 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
இச்சம்பவங்கள் குறித்து, ஓசூர் சிப்காட் மற்றும் நல்லுார் போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஓசூர், ஏ.வி.எஸ்., அவென்யூ லேஅவுட் அருகே நேற்று அதிகாலை, பைக்கிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த, 2 வாலிபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிப்காட் போலீசார் விசாரித்தபோது, விபத்தில் சிக்கியது கர்நாடகா மாநிலம், சிக்பல்லாப்பூர் அருகே நாராயணஹள்ளியை சேர்ந்த பாலாஜி, 25, மற்றும் ஹரீஸ், 23, என்பதும், இருவரும் கீர்த்தி மற்றும் மணியம்மாளிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. பாலாஜிக்கு வலது காலிலும், ஹரிசிற்கு இடது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 11 பவுன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும், கர்நாடக மாநில போலீஸ் ஸ்டேஷன்களில், 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது
குறிப்பிடத்தக்கது.