/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேணுகோபால் சுவாமி கோவில் தேரோட்டம்
/
வேணுகோபால் சுவாமி கோவில் தேரோட்டம்
ADDED : மார் 04, 2024 10:47 AM
ஓசூர்: ஓசூர் அருகே சொக்கரசனப்பள்ளி கிராமத்தில், பழமையான வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், 3 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா துவங்கி நடந்து வந்த நிலையில், கடைசி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் வேணுகோபால் சுவாமி உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட இருகாளை மாடுகள் முன்னே செல்ல, பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.முக்கிய வீதிகளில் சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது.
சொக்கரசனப்பள்ளி, கக்கனுார், கொத்துார் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநில பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின் போது, கலைஞர்கள் பலர் காளி, அம்மன் உள்ளிட்ட சுவாமி வேடமணிந்து, மேள தாளங்கள் முழங்க, பக்தி பரவசத்துடன் ஆடி வந்தனர். ஏராளமான இளைஞர்கள் உரியடித்து மகிழ்ந்தனர்.

