/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளிகள் தினவிழா 72 பேருக்கு நலத்திட்ட உதவி
/
மாற்றுத்திறனாளிகள் தினவிழா 72 பேருக்கு நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகள் தினவிழா 72 பேருக்கு நலத்திட்ட உதவி
மாற்றுத்திறனாளிகள் தினவிழா 72 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : டிச 04, 2025 07:06 AM

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி., பார்வையற்றோர் பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. பர்கூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து கலெக்டர் தினேஷ்குமாருடன் இணைந்து, 21 பேருக்கு மின்கலன் பொருத்திய நாற்காலி வண்டி, தையல் இயந்திரம், பிரெய்லி வாட்சி உள்பட, 72 மாற்றுத்திறனாளிகளுக்கு, 30.63 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் ஒருங்கிணைத்து, 'தடைகளை தகர்ப்போம், அனைவரையும் உள்ளடக்கிய சமுதாய வளர்ச்சி பாதை அமைப்போம்' என்ற இலக்கில் இவ்விழா நடத்தப்படுகிறது.
புதன்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் மட்டும் நடந்த மாற்றுத்திறனாளிகள் முகாம், புதன், வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த பகுதி மருத்துவமனைகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 190 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் தேவை மற்றும் அவர்களுக்கான திட்டங்கள் சென்றடைகிறதா என வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர். மாத உதவித்தொகை, அடையாள அட்டை, உதவி உபகரணங்களுடன், தனியார் நிறுவன பங்களிப்புடன் அதிகளவில் மின்கல சக்கர நாற்காலி நம் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பயின்று எதிர்காலத்தில் சிறந்த அதிகாரிகளாக வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓவிய போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

