/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கட்சிக்கே தேவையில்லாத ஒருவரை ஏன் அமைச்சர் பதவியில் வைத்துள்ளீர்கள்'
/
'கட்சிக்கே தேவையில்லாத ஒருவரை ஏன் அமைச்சர் பதவியில் வைத்துள்ளீர்கள்'
'கட்சிக்கே தேவையில்லாத ஒருவரை ஏன் அமைச்சர் பதவியில் வைத்துள்ளீர்கள்'
'கட்சிக்கே தேவையில்லாத ஒருவரை ஏன் அமைச்சர் பதவியில் வைத்துள்ளீர்கள்'
ADDED : ஏப் 21, 2025 07:57 AM
கிருஷ்ணகிரி: ''கட்சிக்கே தேவையில்லாத அமைச்சர் பொன்முடியை, ஏன் அமைச்சர் பதவியில் வைத்துள்ளீர்கள்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசினார்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கக்கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது: திருநீர் பூசிக்கொள்வதும், நாமம் இட்டுக்கொள்வதும் ஹிந்து மதத்தின் அடையாளங்கள். அதை கீழ்தரமாக கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்திருக்கின்றார் அமைச்சர் பொன்முடி. தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கேட்டுக் கொள்வது என்னவென்றால், அமைச்சராக உள்ள பொன்முடியின் கொச்சையான பேச்சிற்கு பின், அவரை கட்சி துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினீர்கள்.
உங்கள் கட்சிக்கு தேவையில்லாதவர் என, கட்சி பதவியை பறித்த நீங்கள், மக்கள் நேசிக்கக்கூடிய, வழிபடக்கூடிய தெய்வங்களின் அடையாளங்களை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். ஆனால் அவரை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை. இவர்கள், கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு, கடவுள் பக்தி உள்ளவர்களை புண்படுத்தக்கூடிய வகையில், கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அரசு டவுன் பஸ்சில் வந்த பெண்களை பார்த்து, ஏம்மா நீங்கள் எல்லாம் ஓசியில் பஸ் ஏறி வந்து விட்டீர்களா என்று கீழ்தரமாக பேசக்கூடிய ஒருவரை, தொடர்ந்து, ஏன் நீங்கள் அமைச்சரவையில் வைத்திருக்கிறீர்கள். அவரை உடனே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். உயர்நீதிமன்றமே, அமைச்சர் பொன்முடி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளது. அப்படிப்பட்ட கீழ்தரமான அமைச்சரைத்தான் நீக்க வேண்டும் என, நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.
நகர செயலாளர் கேசவன், எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், கிருஷ்ணன், பையூர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

