/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் நெடுஞ்சாலையில் பட்டர்பிளை மேம்பாலம் அமையுமா? கண்டுகொள்ளாத என்.எச்., அதிகாரிகள்
/
ஓசூர் நெடுஞ்சாலையில் பட்டர்பிளை மேம்பாலம் அமையுமா? கண்டுகொள்ளாத என்.எச்., அதிகாரிகள்
ஓசூர் நெடுஞ்சாலையில் பட்டர்பிளை மேம்பாலம் அமையுமா? கண்டுகொள்ளாத என்.எச்., அதிகாரிகள்
ஓசூர் நெடுஞ்சாலையில் பட்டர்பிளை மேம்பாலம் அமையுமா? கண்டுகொள்ளாத என்.எச்., அதிகாரிகள்
ADDED : ஜன 17, 2025 06:20 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி - ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சராசரியாக, 70,000 வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், ஓசூருக்கு புதிதாக அமைக்கப்படும் பஸ் ஸ்டாண்டால் பெரிய அளவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் அரங்கேறும் வாய்ப்புள்ளது. அதனால், பட்டர் பிளை மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் கேட்டும், தேசிய நெடுஞ்சாலைத்துறை செவி சாய்க்காமல் மவுனம் காக்கிறது.
தமிழக எல்லையான ஓசூர் நகரில் சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட், இட நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளது. தினமும், 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும் நிலையில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளதால், பஸ்கள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, ஓசூருக்கு புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் கட்ட, பத்தலப்பள்ளி அருகே ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதில், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தில், 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2023 அக்., மாதம் பணிகள் துவங்கப்பட்டன.
புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைகிறது. அதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து, செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் தான் திரும்பி செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி - ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும், 70,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பண்டிகை, முக்கிய விசேஷ நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், 1 லட்சம் வாகனங்கள் வரை செல்கின்றன. அதனால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின், பத்தலப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் வந்தால், விபத்துகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள பத்தலப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்தால் மட்டுமே, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் ஓரளவிற்கு குறைக்க முடியும். பத்தலப்பள்ளியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஓராண்டிற்கும் மேலாக உள்ளது.
அங்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை தான் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதனால், ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் மூலம், பத்தலப்பள்ளி பகுதியில் பட்டர் பிளை மேம்பாலம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை தேசிய நெடுஞ்சாலைத்துறை, பட்டர் பிளை மேம்பாலம் அமைப்பதில், மவுனம் காக்கிறது. இதுவரை ஆய்வு கூட மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசு நேரடியாகவும், எம்.பி.,க்கள் மூலமாகவும் மத்திய அரசுக்கு, அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்வரும். இல்லாவிட்டால் புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின்பும் ஓசூரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பில்லை.
இந்தாண்டு இறுதிக்குள் பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்க தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அதற்குள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பேசி பட்டர் பிளை மேம்பாலத்திற்கு அனுமதி பெற வேண்டியது, மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். இல்லாவிட்டால் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். எதற்காக புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறதோ, அது நிறைவேறாமல் போய் விடும்.