/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாய் கடித்து 'ரேபிஸ்' பாதிப்பு: தொழிலாளி பலி
/
நாய் கடித்து 'ரேபிஸ்' பாதிப்பு: தொழிலாளி பலி
ADDED : செப் 18, 2025 02:53 AM

தளி:தளி அருகே, நாய் கடியால், 'ரேபிஸ்' நோய் பாதித்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 8 மாதத்தில், நாய் கடித்து, 'ரேபிஸ்' நோய் தொற்று பாதிப்பால், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், என்.புதுார் கிராமத்தை சேர்ந்தவர் முனிமல்லப்பா, 55, கூலித்தொழிலாளி. தளி அருகே கோட்டையனே அக்ரஹாரம் கிராமத்திலுள்ள முனிராஜ் என்பவரின் எஸ்டேட் தோட்டத்தில், 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
கடந்த, 27ம் தேதி இரவு, தோட்டத்தின் அருகே சுற்றித்திரிந்த தெரு நாய், முனிமல்லப்பா முகத்தில் கடித்து விட்டது.
தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, சில நாட்கள் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், ஒரு நாள் மட்டும் சிகிச்சை பெற்ற அவர், கர்நாடகா மாநிலம், கனகபுராவில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்று விட்டார். அவருக்கு நேற்று முன்தினம் மயக்கம் வந்தது. அவரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு, 'ரேபிஸ்' நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. சரியான சிகிச்சை பெறாததால், அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, முனிமல்லப்பா உயிரிழந்தார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 8 மாதங்களில் நாய் கடித்து, 'ரேபிஸ்' நோய் தொற்று பாதிப்பால், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மூவரும் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள்.