/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சென்னை போல் மதுரையிலும் போலீஸ் மியூசியம் அமையுமா
/
சென்னை போல் மதுரையிலும் போலீஸ் மியூசியம் அமையுமா
ADDED : ஆக 23, 2024 04:44 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள பழைய எஸ்.பி., அலுவலகம் பயன்பாடின்றி பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. சென்னை போல் இங்கும் சுற்றுலா பயணிகளை கவர மதுரை போலீசாரின் சாதனைகள், முக்கியவழக்குகளின் புலனாய்வு விபரங்கள் அடங்கிய போலீஸ் மியூசியம் அமைக்கலாம்.
மீனாட்சி கோயில் தெற்கு சித்திரை வீதி தெற்கு காவல் கூட தெருவில் பத்தாண்டுகளுக்கு முன் போலீஸ் கமிஷனர், எஸ்.பி., அலுவலகங்கள் அடுத்தடுத்து இயங்கின. பழமையான கட்டடம், இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணமாக இரு அலுவலகங்களும் அழகர்கோவில் ரோட்டிற்கு இடமாற்றப்பட்டன. பழைய கமிஷனர் அலுவலகம் தற்போது போக்குவரத்து துணைகமிஷனர் அலுவலகமாக உள்ளது. பழைய எஸ்.பி., அலுவலகம் எந்த பயன்பாடுமின்றி பாழடைந்து வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கழிவுப் பொருட்களை பாதுகாக்கும் கோடவுனாக மாற்றியுள்ளனர். மாடிப்பகுதியில் செடிகள் முளைத்து இன்று மரங்களாக வளர்ந்து விட்டன.
இதுபோன்ற பழமையான கட்டடங்களை தொல்லியல் துறை வசம் ஒப்படைத்தால், பழைய வரலாற்றுகளை நினைவுப்படுத்தும் இடமாக மாற்றி சுற்றுலா பயணிகளை ஈர்க்க வாய்ப்புண்டு. அல்லது சென்னை பழைய கமிஷனர் அலுவலகத்தை போலீஸ் மியூசியமாக மாற்றியது போல், மதுரையில் பழைய எஸ்.பி., அலுவலக கட்டடத்தையும் மியூசியமாக மாற்றலாம். மீனாட்சி கோயிலுக்கு வரும் பக்தர்கள், போலீஸ் மியூசியத்திற்கும் வந்து செல்வர். உள்ளூர் மக்களுக்கும் பொழுதுபோக்கு இடமாக அமையும். நுழைவுக்கட்டணம் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.