/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
23 ரயில்வே கேட்கள் மின்சாரத்தில் இயக்கம்
/
23 ரயில்வே கேட்கள் மின்சாரத்தில் இயக்கம்
ADDED : ஜூலை 04, 2024 02:32 AM

மதுரை:மதுரை கோட்டத்தில் 23 ரயில்வே கேட்கள் மின்சாரம் மூலம் இயக்கப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ரயில் பாதை, ரோடு சந்திப்புகளில் ரயில்வே சார்பில் நீண்ட இரும்பு பைப்கள் கொண்ட கேட்கள் அமைக்கப்பட்டன. ரயில் சென்றபின் அருகில் உள்ள சக்கரத்தை சுழற்றி கேட்களை திறக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதை தவிர்க்க மதுரை கோட்டத்தில், 23 கேட்கள் மின்சாரத்தால் இயங்கும்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 12 வினாடிகளில் கேட்டுகளை திறக்கவும், மூடவும் முடியும்.
ஊழியர் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் கேட்டின் இரும்பு பைப்களை எளிதாக ஏற்றி இறக்க முடியும். ரயில் கடந்த பிறகு வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறையும்.
இவ்வகை கேட்டுகள் அமைக்க, 20 லட்சம் ரூபாய் செலவாகிறது. வாகன ஓட்டிகள் கேட்டில் மோதி சேதம் ஏற்படுத்தினால், 2.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை பழுதுபார்ப்பு செலவு அவர்களிடம் வசூலிக்கப்படும்.
எனவே, ரயில்வே கேட் அடைத்திருக்கும் போது உரிய இடைவெளியில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த நிதியாண்டில் மேலும், 100 ரயில்வே கேட்கள், மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.