/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47வது பிறந்தநாள்; ரயில் ஆர்வலர்கள் கொண்டாட்டம்
/
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47வது பிறந்தநாள்; ரயில் ஆர்வலர்கள் கொண்டாட்டம்
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47வது பிறந்தநாள்; ரயில் ஆர்வலர்கள் கொண்டாட்டம்
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 47வது பிறந்தநாள்; ரயில் ஆர்வலர்கள் கொண்டாட்டம்
UPDATED : ஆக 16, 2024 06:08 AM
ADDED : ஆக 16, 2024 04:39 AM

மதுரை: மதுரையின் அடையாளமான வைகை விரைவு ரயிலின் 47 வது பிறந்த நாளை ரயில் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
1977 ஆக.15 ல் மதுரை-- சென்னை இடையே வைகை விரைவு ரயில் முதன் முதலில் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் மீட்டர் கேஜ் பாதையில் 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட முதல் ரயில் என்ற பெருமை வைகை ரயிலுக்கு உண்டு.
முன்பு பச்சை, மஞ்சள் வண்ணங்களில் தனித்துவமாக வலம் வந்தது. ரயில் கார்டுக்கும், ஓட்டுனருக்கும் இடையே இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்ட முதல் ரயில் இதுதான்.
தனது முதல் நாள் ஓட்டத்தில் மதுரை - சென்னை இடையிலான 495 கி.மீ., துாரத்தை 7 மணி 5 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தது.
2022 மார்ச் 3ல் அதே துாரத்தை 6 மணி 43 நிமிடத்தில் கடந்து தனது சாதனையை முறியடித்தது. மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்படும் ரயில்களில் ஏ.சி., சேர் கார் பெட்டிகள் முதன்முதலில் இந்த ரயிலில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
வேகத்தில் மதுரையின் 'ராஜ்தானி'யாக உள்ள இந்த ரயிலின் பிறந்த நாளை ரயில் ஆர்வலர்கள் நேற்று கொண்டாடினர். கோட்ட ரயில்வே மேலாளர் ஷரத் ஸ்ரீவத்ஸவா, கூடுதல் மேலாளர் நாகேஸ்வரராவ் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பார்ம் 3ல் இருந்து காலை 6:40 மணிக்கு சென்னை புறப்பட இருந்த வைகை ரயிலை பூமாலையால் அலங்கரித்து, தீபாராதனை காட்டினர்.
பின் ஊழியர்கள், பொது மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். ரயில் ஓட்டுனர் செல்வராஜூ, உதவி ஓட்டுனர் கிருஷ்ணகுமாருக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்தனர். இந்த ரயிலின் முன்னாள் ஓட்டுனர்கள் பாலசுப்பிரமணியம், கிருஷ்ணன், முனாவர் பாஷா ஆகியோருக்கு ஷில்டு வழங்கி கவுரவித்தனர். பயணிகளுக்கு பெட்டிகளிலேயே கேக் வெட்டி வைகை ரயிலின் சிறப்புகளை எடுத்துக் கூறினர்.
ஏற்பாடுகளை ரயில் ஆர்வலர்கள் அருண்பாண்டியன், ஹரி, அரவிந்த், கிஷோர், நரேஷ் சரவணன் செய்தனர்.