/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரச்னைகளுக்கு தீர்வு தரும் புத்தகம்: பபாசி செயலாளர் முருகன் கருத்து
/
பிரச்னைகளுக்கு தீர்வு தரும் புத்தகம்: பபாசி செயலாளர் முருகன் கருத்து
பிரச்னைகளுக்கு தீர்வு தரும் புத்தகம்: பபாசி செயலாளர் முருகன் கருத்து
பிரச்னைகளுக்கு தீர்வு தரும் புத்தகம்: பபாசி செயலாளர் முருகன் கருத்து
ADDED : செப் 15, 2024 06:10 AM

மதுரை தமுக்கத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழா குறித்து தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) செயலாளர் முருகன் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்தி வாசகர்களை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு நடந்து வருகிறது.
சென்னைக்கு அடுத்து இங்கு தான் பிரம்மாண்டமாக 231 ஸ்டால்களில் லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பைரேட்டட் புத்தகங்களை அதிகளவில் ஆன்லைன் மூலம் தரவிறக்கம் செய்து படிக்கின்றனர். ஆன்லைனில் கிடைக்காத புத்தகங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இதுபோன்ற திருவிழாக்களுக்கு வாசகர்கள் நேரில் வந்து அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதே பபாசியின் குறிக்கோள்.
மாணவர்கள் பயனடையும் வகையில் பள்ளி திறக்கப்பட்ட பின்னரே புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என கலெக்டர் சங்கீதா குறிக்கோளாக வைத்திருந்தார். அதனால் இந்தாண்டு பள்ளி மாணவர்கள் அதிகளவில் கண்டுகளித்து பயனடைந்து வருகின்றனர்.
அவர்கள் எளிமையாக புத்தகங்களை வாங்கிப் பயன்பெற நுழைவு வாயிலில் 3 ஸ்டால்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. அதில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
குழந்தைப்பருவத்திலேயே அவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதனால் தான் இந்தாண்டு அவர்களுக்கான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
மனிதனுக்கு பிரச்னைகள் இருப்பது இயற்கை. புத்தகம் படிப்பதால் அதில் உள்ள கதைகளோ, கட்டுரைகளோ, இலக்கியமோ ஏதோவொரு வகையில் அவனது பிரச்னைகளுக்கு தீர்வை வழங்கும். அவனுக்கு ஒரு சிறந்த நண்பனாகவும், வழிகாட்டியாகவும் புத்தகங்கள் திகழும்.
புத்தக திருவிழா இன்றும் நாளையும் தான். வாசகர்கள் தங்களுக்கான அறிவுப் பசியை தீர்த்துக்கொள்ள வர வேண்டும் என்றார்.