ADDED : ஜூன் 19, 2026 06:13 PM
சோழவந்தான்: -கருப்பட்டி ஊராட்சி பொம்மன்பட்டியில் கால்வாய் பாலம், ரோட்டை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இங்கு கருப்பட்டி, அம்மச்சியாபுரம் பிரிவில் பொம்மன்பட்டி ரோடு சந்திப்பில் வைகை வடகரை கால்வாயின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டப்பட்டது.
பாலம் உயர்ந்து ரோடுகள் தாழ்ந்து ஏற்றம் இறக்கமாக இருப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. பாலத்தின் இருபுறமும் ரோடுகள் பெயர்ந்து கரடு முரடாக காட்சியளிக்கின்றன. பக்கவாட்டில் பகுதியளவு மட்டுமே தடுப்பு சுவர் அமைந்துள்ளது. இதனால் மற்ற பகுதிகளில் பாதுகாப்பாற்ற நிலை உள்ளது.
தெருவிளக்குகள் அமைக்காததால் இரவில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் சைக்கிள் ஓட்டி வந்த நபர் இவ்விடத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். வரும் காலங்களில் இது போன்ற விபரீதம் தொடர வாய்ப்புள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
