ADDED : மார் 03, 2025 04:53 AM

மேலுார் : திருவாதவூரில் பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் பயன்பாடு இல்லாததால் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
இக்கிராமத்தின் மையப்பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்காக ரூ.பல லட்சம் செலவில் 2016 -17ல் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது.
தற்போது போதிய பராமரிப்பில்லாமல் பாழாகுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: உடற்பயிற்சிக் கூடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து செங்கல் வெளியே தெரிகிறது.
திருடு போன உடற்பயிற்சி உபகரணங்கள் தவிர, மீதமுள்ளவை பயன்படுத்த முடியாத அளவில் சேதமடைந்துள்ளது.
புதர் மண்டியுள்ளதால் விஷப்பூச்சிகளின் வாழ்விடமாகவும், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறிவிட்டது.
அங்கு சிறுவர்களை விளையாட அழைத்துச் செல்ல முடியவில்லை. ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க வேண்டும் என்றனர்.