/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் கனவாகிப்போன சுரங்கப்பாதை
/
குன்றத்தில் கனவாகிப்போன சுரங்கப்பாதை
ADDED : ஏப் 30, 2024 12:24 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப் படாததால் பொதுமக்கள், மாணவியர் சிரமப்படுகின்றனர்.
திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த தார் ரோட்டில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது. பாலாஜி நகர், பாலசுப்பிரமணிய நகர், ஹார்விபட்டி, சந்திராபாளையம் பகுதி மக்கள், மாணவியர் திருப்பரங்குன்றம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இந்த பாதையை பயன்படுத்தினர்.
விபத்தை தடுக்க ரயில்வே துறை தடுப்புகள் அமைத்ததால் மேம்பாலம் வழியாக மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டது.
பாலத்தின் ஆரம்பம், முடிவு பகுதி வெகு துாரத்தில் உள்ளதால் மக்கள் சிரமம் அடைகின்றனர். அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என சர்வ கட்சியினர், வணிகர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சுரங்கப்பாதை அமைக்க திருமங்கலம் ஆர்.டி.ஓ., சாந்தி ஆய்வு செய்தார். ரயில்வே பொறியாளர்களிடமும் ஆலோசனை நடத்தினார். சுரங்கப்பாதை அமைக்கும் வரை அடைக்கப்பட்ட ஒரு பகுதியை திறந்து விடுமாறு ரயில்வே பணியாளரிடம் கூறினார்.
சுரங்கப்பாதை அமைக்குமாறு மாணிக்கம் தாகூர் எம்.பி., ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ரயில்வே துறைக்கு கடிதம்எழுதினர். ஆனால் இதுவரை சுரங்கப்பாதை அமைக்க எந்த முயற்சியும் நடக்கவில்லை.

