/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாட்டுத்தாவணியில் மாட்டிக்கிட்ட வழிப்பறி கும்பல்
/
மாட்டுத்தாவணியில் மாட்டிக்கிட்ட வழிப்பறி கும்பல்
ADDED : ஜூலை 07, 2024 02:26 AM

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மதுரை தத்தநேரி லோடுமேன் ராஜா 32. வெளியூர் சென்று விட்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பயணிகள் ஓய்வறையில் தங்கினார். அப்போது சிலர் இடுப்பில் கத்தியை வைத்து 'இளையாங்குடி கவுதம் பயலுகனா மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டே அலறும்டா' என 'உதார்' கொடுத்து மிரட்டி அலைபேசி, பணத்தை பறித்தனர்.
பின்னர் பயணிகளையும் மிரட்ட மக்கள் ஒன்றுதிரண்டு பிடிக்க முயல தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி கவுதம் 29, ஒத்தக்கடை ஜெயராமன் 20, கல்மேடு சுரேஷ் 42, துரைராஜ் 43, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாண்டிராம், காட்டுராஜா, செந்தாமரைக்கண்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது: கவுதம் தலைமையிலான வழிப்பறி கும்பல் தொடர்ந்து பயணிகளை மிரட்டி அலைபேசி, பணத்தை பறித்து வந்துள்ளனர். நாங்கள் விசாரிக்க செல்லும்போது கழிவறையில் பதுங்குவது, பயணிகள் போல் துாங்குவது என 'எஸ்கேப்' ஆயினர்.
வழிப்பறி அலைபேசிகளை பாண்டிகோவில் பகுதியில் பச்சை குத்தும் தொழிலாளி சுரேஷிடம் கொடுத்து விற்றுள்ளனர். அதேபோல் 'பஜார், ஒயின்ஷாப்புகளில் குடிக்க காசு இல்லை' எனக்கூறி அலைபேசியை கிடைத்த விலைக்கு விற்றுள்ளனர் என்றனர்.