ADDED : ஜூலை 30, 2026 07:03 PM
மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தடகள, குழு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் நிலையில் பார்வையாளர் காலரி குப்பைமேடாக உள்ளது.
ஒரு மாதமாக அனைத்து குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகள, குழு விளையாட்டுப் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 500 முதல் 1000 மாணவர்கள் பங்கேற்கின்றனர். ஏற்கனவே கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ள நிலையில் குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி குடிநீர் இணைப்பு இல்லாததால் விளையாட்டு அலுவலகம் சார்பில் விலைக்கு லாரியில் குடிநீர் வாங்கி தொட்டியில் ஏற்றப்படுகிறது. குடிநீர் தீர்ந்த நிலையில் குடிநீரைத் தேடி மாணவர்கள் தவிக்கின்றனர்.
தினமும் போட்டி நடந்து முடிந்தபின் குப்பையை அள்ளி சுத்தம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாததால் பார்வையாளர் காலரியை ஒட்டியுள்ள பகுதியை குப்பைமேடாக மாற்றியுள்ளனர். குடிநீர் பாட்டில், பாலித்தீன் பை, பாக்குமட்டை தட்டுகள், காபி கப்கள் குவிந்து கிடக்கின்றன. காற்றடிக்கும் போது இவை தடகள டிராக் உட்பகுதியில் பறக்கிறது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் கூறுகையில்,‘‘குப்பைத்தொட்டி இல்லாததால் மாநகராட்சியிடம் ஏற்கனவே கேட்டுள்ளோம். அதுவரை ஊழியர்கள் மூலம் குப்பையை உடனுக்குடன் அள்ள ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்றார்.
