/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.5 கோடியில் புதுப்பொலிவுடன் ரயில் ஓட்டுனர்களுக்கு விடுதி மதுரையில் திறக்கப்பட்டது
/
ரூ.5 கோடியில் புதுப்பொலிவுடன் ரயில் ஓட்டுனர்களுக்கு விடுதி மதுரையில் திறக்கப்பட்டது
ரூ.5 கோடியில் புதுப்பொலிவுடன் ரயில் ஓட்டுனர்களுக்கு விடுதி மதுரையில் திறக்கப்பட்டது
ரூ.5 கோடியில் புதுப்பொலிவுடன் ரயில் ஓட்டுனர்களுக்கு விடுதி மதுரையில் திறக்கப்பட்டது
ADDED : ஜூலை 15, 2024 06:10 AM

மதுரை : ரயில்வே லோக்கோ பைலட்கள், உதவி பைலட்கள், மேலாளர்கள், தொலைதுார ஸ்டேஷன்களுக்கு ரயில்களை இயக்குவோர் ஓய்வெடுக்கும் விடுதி ரூ. 5 கோடி செலவில் 'ரயில் ட்ரீ - டிரெயின் க்ரூ நெஸ்ட்' (ரயில் மரம் - ஓடும் தொழிலாளர்கள் கூடு) என்ற பெயரில் பொலிவூட்டப்பட்டு மதுரை ரயில்வே காலனியில் திறக்கப்பட்டது.
ரயில்வே காலனியில் இவ்விடுதி பல ஆண்டுகளாக இயங்குகிறது. தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவருக்கு ஒரு அறை என ஒதுக்குமளவு 40 அறைகள் உள்ளன. குளிர்சாதனம், உடைமைகளை பாதுகாக்க, படிக்க தனி மின் விளக்கு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பெண் லோக்கோ பைலட்களுக்கு மூன்று படுக்கைகள் கொண்ட இரு தனி அறைகள் உள்ளன. ரயில் இன்ஜின் ஆய்வாளர்களுக்கு இரு படுக்கைகள் கொண்ட ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வருவோருக்கு ஓடும் தொழிலாளர் ஓய்வறை மேலாண்மை திட்டம் என்ற மென்பொருள் வாயிலாக அறைகள் ஒதுக்கப்படும்.
இந்த ஓய்வறையில் ஒரே நேரத்தில் 48 பேர் தங்க முடியும். சமையலறை, உணவு அருந்த, புத்தகங்கள் படிக்க அறை, யோகா தியானம் செய்ய அறை, உடற்பயிற்சி கூடம், கண்காணிப்பு கேமரா உள்ளன. 90 சதவீதம் மானிய விலையில் சைவ, அசைவ உணவு வழங்கப்படும். இந்த விடுதி 24 மணி நேரமும் செயல்படும்.
மூத்த கோட்ட பொறியாளர் அமல் செபாஸ்டியன் கூறியதாவது: இங்கு தங்க கட்டணம் கிடையாது. ரயிலின் ஓட்ட நேரத்தை பொருத்து 8 முதல் 16 மணி நேரம் வரை ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கலாம். திருவனந்தபுரம், நாகர்கோவில், சேலம், ஈரோடு, கோயம்புத்துார், பாலக்காடு, திருச்சி, விழுப்புரம் பகுதிகளில் இருந்து லோக்கோ பைலட்கள் வருகின்றனர்.
இவர்களுக்கு 14 குளிர்சாதன அறைகள் உள்ளன. ரயில்கள் புறப்படும் நேரத்திற்கு முன் அவர்களை எழுப்பி பணிக்கு செல்ல விடுதி காப்பாளர் உதவுவார் என்றார். உதவி கோட்ட பொறியாளர் கிளிவெட்டி பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.

