
தெருவெல்லாம் சாக்கடை
பழைய குயவர்பாளையம் ரோடு ஜானகி தெருவில் சில மாதங்களாக பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் தேங்கியுள்ளது. வயதானவர்கள், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மணிமாறன், தெற்குவாசல்.
தெருநாய் தொல்லை
மதுரை விஸ்வநாதபுரத்தில் தெருநாய்கள் அதிகளவில் உலா வருகின்றன. குழந்தைகள் விளையாடும் போதும், டூவீலரில் செல்லும் போதும் துரத்திச் சென்று கடிக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
- ஷைலஜா, விஸ்வநாதபுரம்.
பள்ளிக் குழந்தைகள் அவதி
மதுரை 37 வது வார்டு அன்புநகர் வ.உ.சி., 2வது குறுக்குத் தெருவில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தியாகி மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், அன்புநகர்.
பெயரை மாத்துங்க
கச்சிராயன்பட்டி அருகே கோட்டப்பட்டியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தில் அமைத்த ரோட்டில் ஒரு பக்கம் மட்டும் எல்லைக்கோடு வரைந்துள்ளனர். மைல் கல்லில் கொட்டப்பட்டி என பெயரையும் தவறாக எழுதியுள்ளனர். அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
- மலைச்செல்வம், கோட்டப்பட்டி.
சித்திரை வீதியில் பீதி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு சித்திரை வீதியில் மின்சார கேபிள்களும், சிதிலமடைந்த பாதாள சாக்கடை சிலாப்களும் பக்தர்களை காவு வாங்க காத்துக்கொண்டிருக்கின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அழகர், வடக்குவாசல்.
மூச்சு முட்டுதுங்கய்யா
ஒத்தக்கடை - திருமோகூர் ரோட்டில் சேகரிக்கப்படும் குப்பையை ரோட்டோரம் குவித்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியினர் புகைமூட்டத்தால் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கங்கை துரைசாமி, ஒத்தக்கடை.
பஸ் ஸ்டாப் கூரை எங்கே
சோழவந்தானில் எந்தவொரு பஸ் ஸ்டாப்பிலும் நிழற்கூரை இல்லை. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் பரிதவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரங்கநாதன், சோழவந்தான்.