
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
மதுரை பீ.பீ.குளம் ஐந்து முனை சந்திப்பிலிருந்து போலீஸ் ஆயுதப்படை குடியிருப்பு செல்லும் ரோட்டில் பாதாள சாக்கடை மேன்ேஹால் வழியாக கழிவுநீர் அடிக்கடி வெளியேறி ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் குழாய் உடைப்பை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜன்பாபு, பீ.பீ.குளம்.
நாய்கள் தொந்தரவு
மதுரை எச்.எம்.எஸ். காலனி புதுவாழ்வு நகரில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளது. தெருவில் செல்வோரை விரட்டி கடிப்பதால் மக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். அவற்றை கட்டுப்படுத்த முறையாக அறுவை சிகிச்சை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், புதுவாழ்வுநகர்.
* மதுரை மாநகராட்சி மகாலட்சுமிநகர், ஐலேண்ட் நகர், கே.வி.ஆர்.நகர் பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. அதிகாலை நடைபயிற்சி செய்வோரை விரட்டுகின்றன. கால்நடைகளையும் உரிமையாளர்கள் அவிழ்த்து விடுவதால் தெருக்களில் சுற்றி திரிகின்றன. இதனால் விபத்து அபாயமும் உள்ளது. இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா.
-சிவபாலன், மகாலட்சுமி நகர்.
* மதுரை டி.வி.எஸ்., நகர் லட்சுமி ரோட்டில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். சிலர் காலை நடைபயிற்சி செல்கையில் தெருநாய்களுக்கு பிஸ்கட் கொடுத்து பழக்கியுள்ளதால் மற்றவர்களிடமும் அவை எதிர்ப்பார்க்கின்றன. மாநாகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலா, டி.வி.எஸ்.,நகர்.
குப்பையால் அவதி
அய்யர்பங்களா உச்சபரம் புமேட்டில் மாநகராட்சி தொட்டிகளிலுள்ள குப்பையை முறையாக தினமும் அள்ளாததால் தெரு வரை சிதறி கிடக்கின்றன. அவற்றில் உணவு தேடி நாய்கள், கால்நடைகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ரோட்டில் குறுக்கிடும் நாய்கள், கால்நடைகளால் டூவீலர்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்.
- செல்வம், பனங்காடி.
சட்டவிரோத தொட்டி
மதுரை புதுநத்தம் ரோடு குறிஞ்சி நகர் கபிலர் தெருவில் ஆத்திகுளம் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது. இதன் கழிவுநீர் தொட்டி தெருவில் அமைந்துள்ளது.
இத்தொட்டி அடிக்கடி நிரம்பி ரோட்டில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. இதை அகற்ற மாநகராட்சி, வருவாய்த் துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காந்தி, குறிஞ்சி நகர்.
மாட்டு உரிமையாளருக்கு அபராதம்
மதுரை ரயிலார் நகர் முதல் தெருவில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இரவில் சுற்றித் திரிகின்றன. உரிமையாளர் யார் என தெரியவில்லை.
நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்
அதிகாரிகள் மாடுகளை அப்புறப்படுத்தி, உரிமையாளருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ்குமார், கூடல்புதுார்.

