/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சனிக்கிழமையை பள்ளி வேலைநாளாக அறிவித்ததை ரத்து செய்ய வழக்கு
/
சனிக்கிழமையை பள்ளி வேலைநாளாக அறிவித்ததை ரத்து செய்ய வழக்கு
சனிக்கிழமையை பள்ளி வேலைநாளாக அறிவித்ததை ரத்து செய்ய வழக்கு
சனிக்கிழமையை பள்ளி வேலைநாளாக அறிவித்ததை ரத்து செய்ய வழக்கு
ADDED : செப் 18, 2024 05:27 AM
மதுரை, : பள்ளிகளில் 20 சனிக்கிழமைகளை வேலைநாட்களாக அறிவித்ததற்கு எதிராக தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் பொதுச் செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு:
பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலைநாட்களாக ஜூன் 8 ல் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். இவ்வாறு முடிவு செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை. சம்பந்தப்பட்டோரிடம் கருத்துக் கோரவில்லை. ஆறு நாட்கள் தொடர்ந்து கற்பதால் மாணவர்களுக்கு உடல், மன ரீதியாக பாதிப்பு ஏற்படும். மாணவர்களின் வருகை குறைந்து இடைநிற்றல் அதிகரிக்கும்.
ஆசிரியர்கள் வங்கி மற்றும் இதர அரசுத்துறை சார்ந்த பணியை மேற்கொள்ள வேலைநாட்களில் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் கற்பித்தல் பணி பாதிக்கும்.
மாணவர்களை போட்டித் தேர்விற்கு தயார் செய்தல், கற்றல், கற்பித்தல் சாரா எமிஸ் பணி, உயர்கல்வி வழிகாட்டுதல், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்குரிய சிறப்பு அலுவலர்களை நியமிப்பதில்லை. இச்சூழலில் வேலைநாட்கள் அதிகரிப்பு ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கும்.
கேரள பள்ளிகளில் சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக அறிவித்தது சட்டப்படி ஏற்புடையதல்ல என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் 20 சனிக்கிழமைகளை வேலைநாட்களாக அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும். பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு மனு அனுப்பினோம்.
பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி என்.சதீஷ்குமார் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வி இயக்குனரக இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு அக்.14 க்கு ஒத்திவைத்தார்.