/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் ஊதிய உயர்வு கிடைக்காமல் அவதி
/
வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் ஊதிய உயர்வு கிடைக்காமல் அவதி
வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் ஊதிய உயர்வு கிடைக்காமல் அவதி
வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் ஊதிய உயர்வு கிடைக்காமல் அவதி
ADDED : செப் 10, 2024 05:37 AM
திருமங்கலம்: வேளாண்மை துறையில் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) திட்டம் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு தொழில்நுட்ப மேலாளர், இரண்டு உதவி மேலாளர்கள் உள்ளனர்.
இவ்வகையில் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் பேர் ஒப்பந்த பணியாளர்களாக 2012 மார்ச் முதல் மிகக்குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகின்றனர்.
மத்திய அரசு இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு 2014 முதல் சம்பள உயர்வு வழங்கியது. மாநில அரசு அதை ஊழியர்களுக்கு வழங்காமல் வேளாண் துறையின் வேறு திட்டத்திற்கு பயன்படுத்தியது. இதை எதிர்த்து இப்பணியாளர்கள் 565 பேர் வழக்கு தொடுத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றனர்.
அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கிலும் ஆத்மா திட்டம் இருக்கும் வரை தொடர்ந்து பணி வழங்க நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
அதன்பின்னும் 2018ல் அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கு நிலுவையில் இருப்பதாகக் காட்டி ஆத்மா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்காமல் தவிர்த்து வருகிறது.
இந்த வழக்கு ஊதிய உயர்வு சம்பந்தமானது அல்ல. ஊதிய உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க மாநில அரசு தடையாணையும் பெறவில்லை. இப்படி எந்த முகாந்திரமும் இல்லாமல் அரசு செயல்படுவதால், 2012 முதல் சொற்ப ஊதியத்தில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போதைய விலைவாசியை சமாளிக்க முடியாமல் இதுவரை 8 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. பெண்களுக்கு பேறுகால விடுப்பும் கிடையாது. தற்செயல் விடுப்பு ஒருநாள்கூட கிடையாது என திட்ட ஊழியர்கள் மனம் குமுறுகின்றனர்.
'இந்த ஊழியர்களுக்கு விரைவாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என தமிழ்நாடு வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் சங்க மாநில தலைவர் மனோகர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

