/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆலங்குளம் கண்மாய் நிரம்பியதால் குடியிருப்பு பகுதி மூழ்கும் அபாயம்
/
ஆலங்குளம் கண்மாய் நிரம்பியதால் குடியிருப்பு பகுதி மூழ்கும் அபாயம்
ஆலங்குளம் கண்மாய் நிரம்பியதால் குடியிருப்பு பகுதி மூழ்கும் அபாயம்
ஆலங்குளம் கண்மாய் நிரம்பியதால் குடியிருப்பு பகுதி மூழ்கும் அபாயம்
ADDED : ஆக 11, 2024 04:45 AM

மதுரை ; மதுரை ஆலங்குளம் கண்மாய் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் தொடர் மழையால் இக்கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியுள்ளது. கண்மாயை ஒட்டியுள்ள மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட சீதாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியின் ஒருபுறம், தாழ்வான கண்மாய் கரையால் காலி மனைகளில் நீர் சூழ்ந்துள்ளது.
அக்குடியிருப்பு சங்கத் தலைவர் சரவணன் கூறியதாவது: மழைக்காலங்களில் கண்மாய் நிரம்பும் போதெல்லாம் இப்பிரச்னை வந்துவிடும். கண்மாயின் அனைத்து பகுதியிலும் கரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் உயர்த்தப்படாததால் உபரி நீர் இப்பகுதியை சூழ்ந்துவிடுகிறது. 2 ஆண்டுகளாக கரையை உயர்த்தும்படி அமைச்சர் மூர்த்தி வரை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. தேங்கிய தண்ணீரால் வீட்டின் சுற்றுச் சுவர் பலம் இழக்கிறது. இரவில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருகின்றன என்றார்.
மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கணேசன் கூறுகையில், 'கள்ளந்திரி கால்வாய் வழியாக வரும் வைகை நீர் இக்கண்மாய்க்கு வருகிறது. மேலும் கலைநகர், வள்ளுவர் காலனி பகுதியில் இருந்தும் கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. சில நாட்களாக மழை பெய்வதால் கண்மாய்க்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் மறுகால் வழியாக உபரி நீரானது முடக்கத்தான் கண்மாய்க்கு திறந்து விடப்பட்டுள்ளது. அது நிரம்பியவுடன் செல்லுார் கண்மாய்க்கு திறந்துவிடப்படும். அது நிரம்பினால் வைகை ஆற்றுக்குச் சென்றுவிடும். கண்மாய் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புக வாய்ப்பில்லை' என்றார்.
ஆலங்குளம் கண்மாய் நீர் மறுகால் வாய்க்காலில் திறந்துவிடப்படவில்லை எனில் சீதாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகும் அபாயம் ஏற்படும். எனவே நீர்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதி கண்மாய் கரையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

