/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலைக்கழிக்குது 'அம்ரூத்' திட்டம் : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 'டென்ஷன்'
/
அலைக்கழிக்குது 'அம்ரூத்' திட்டம் : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 'டென்ஷன்'
அலைக்கழிக்குது 'அம்ரூத்' திட்டம் : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 'டென்ஷன்'
அலைக்கழிக்குது 'அம்ரூத்' திட்டம் : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 'டென்ஷன்'
ADDED : பிப் 26, 2025 05:58 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் நடக்கும் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பு, இணைப்பு பணிகளை ஒப்பந்ததாரர்கள் அவர்கள் இஷ்டம் போல் மேற்கொள்வதால் ரோடுகள் சேதம், குடிநீர் குழாய் உடைப்பு, தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாத பிரச்னைகளால் மக்களுக்கு பல்வேறு அலைக்கழிப்புகள் ஏற்படுகின்றன. ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக பேசினர்.
இக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில், கமிஷனர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான உரிம கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 150 சதவீதம் வரை வரி உயர்வு, அதையடுத்து 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என தொடர்ந்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. எனவே தொழில்நிறுவனங்களுக்கான வரியை மாநகராட்சி திரும்ப பெற வேண்டும் என அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
அதற்கு மேயர், 'அனைத்து மாநகராட்சியிலும் ஒரே விதிமுறை தான். மாநகராட்சி வருவாய் அதிகரிக்க வேண்டாமா' என்றார். அதற்கு, 'மதுரையில் பெரிய நிறுவனங்களில் வசூலிக்க வேண்டிய ரூ.பல கோடி நிலுவை வரியை வசூலிக்கலாமே. ஏழை மக்கள், தொழில் நிறுவனங்கள் மீது ஏன் வரி விதிக்க வேண்டும்' என சோலைராஜா கேள்வி எழுப்பினார். இதையடுத்து 'இதுகுறித்து பரிசீலிக்கப்படும்' என மேயர் தெரிவித்தார்.
இதன் பின் நடந்த விவாதம்:
வாசுகி, மண்டலம் 1 தலைவர்: இது 36வது கூட்டம். இதுவரை 100 கேள்விகள் திரும்ப திரும்ப கேட்கப்பட்டுள்ளன. தீர்வு இல்லை. பொதுப்பணித்துறை கண்மாய்களை மாநகராட்சி தான் துார்வாருகிறது. ஆனால் அத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மூன்றுமாவடி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். குப்பை அள்ளும் வாகனங்கள், பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தெருவிளக்கு பிரச்னை இன்னும் தீரவில்லை.
சரவணபுவனேஸ்வரி மண்டலம் 2 தலைவர்: அம்ரூத் திட்டப் பணிகள் அதிக பிரச்னைகளாக உள்ளன. உரிய முறையில் குழாய் இணைப்புகள் வழங்கப்படவில்லை. வரி செலுத்தாத நத்தம் புறம்போக்கு பகுதி வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்தும் பகுதியில் இணைப்பு கிடைக்கவில்லை. மண்டலத் தலைவர்களுக்கு அப்பணிகள் குறித்து எந்த தகவலும் தருவதில்லை. மக்கள் அதிருப்தியாகின்றனர்.
பூமிநாதன், ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,: இத்திட்ட பணிகள் எப்போது தான் முடியும். அதற்காக ரோடுகள் அமைக்கப்படவில்லை. தாமதித்தால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுவிடாதா. சட்டசபை தேர்தலுக்குள் முடியுமா. அப்படி பணிகள் முடிந்தால் தான் தேர்தலை சந்திக்க முடியும். மெத்தனமாக உள்ள ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். எத்தனை நாட்கள் தான் குழாய்களை பதிப்பீங்க. தினேஷ்குமார் கமிஷனராக இருந்தபோது உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார். ஆனால் தற்போது அப்படி நிலைமை இல்லை.
சுவிதா, மண்டலம் 5 தலைவர்: அம்ரூத் திட்டப் பணிகள் மிக மோசமாக நடக்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் பணிகள் அதிருப்தியடைய வைக்கின்றன. முறையின்றி நடக்கும் பணிகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சோலைராஜா: முதல்வர் திறப்பதற்காக பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை சில வார்டுகளில் மட்டும் முழுமையாக முடித்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
ரோடுகள் மிக மோசமாக உள்ளன. இரண்டு நாட்கள் சென்றாலே வாகன ஓட்டிகள் இடுப்பு எலும்பு பாதித்து 'ஆர்த்தோ டாக்டரை' பார்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது. நீதிபதியே வேதனைப்படும் வகையில் மாநகராட்சியில் எங்குபார்த்தாலும் குப்பை உள்ளன. மழைநீர் வாய்க்கால்கள் அடைப்பு நீக்கவில்லை. 10 ஆயிரம் வணிக கட்டடங்களுக்கு குடியிருப்பு கட்டணமாக வரி வசூலிக்கப்படுகிறது. அதுதொடர்பாக முந்தைய கமிஷனர் தினேஷ்குமார் அமைத்த விசாரணை குழுவின் தற்போதைய நிலை என்ன.
மேயர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கார்த்திகேயன் (காங்.,): மேலமடையில் பழைய மயானம் ரூ.2 கோடியில் எரிவாயு மயானமாக சீரமைக்கப்பட்டது. ஆனால் முன்பகுதி, பழைய கட்டடங்கள் சீரமைக்கப்படவில்லை. குடியிருப்பு பகுதி என்பதால் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.