/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகாரிகள் செய்யாததை செய்து முடித்த ஆட்டோக்காரர்
/
அதிகாரிகள் செய்யாததை செய்து முடித்த ஆட்டோக்காரர்
ADDED : மே 30, 2024 03:41 AM

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை அதிகாரிகள் சீரமைக்காத நிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தற்காலிகமாக சீரமைத்து பலரது பாராட்டையும் பெற்றார்.
திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் உள்ள ரயில்வே கிராஸிங்கில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன. இந்த விமான நிலைய ரோட்டில், தேவர் சிலை முதல் காமராஜர்புரம் வடபகுதி வரை குண்டும், குழியுமாக சேதமடைந்து உள்ளது.
ரயில்வே மேம்பாலம் பணிக்காக உரிய மாற்றுப் பாதை அமைக்கவில்லை. 20 மீட்டர் துாரம் மண் ரோடு மட்டுமே உள்ளது. அதுவும் மழையால் சேதமடைந்துள்ளது. ஏற்கனவே இருந்த ரோட்டிலும் பள்ளங்களை சீரமைக்கவில்லை. பாலம் வேலையை ஆய்வு செய்த உயர்மட்ட தணிக்கை குழு அதிகாரிகளும், அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டு கொள்ளவில்லை. நேற்று அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் அக்பர் அலி ரோட்டின் அவலம் கண்டு மனம் வெதும்பினார். ரோட்டில் இருந்த பள்ளங்களை கட்டட கழிவுகள், மண் கட்டிகளைப் பள்ளத்தில் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தார். அவரை பொதுமக்கள் பாராட்டினர்.