/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூச்சிநோய் கண்காணிப்பு திடல் அமைக்க ஏற்பாடு
/
பூச்சிநோய் கண்காணிப்பு திடல் அமைக்க ஏற்பாடு
ADDED : ஏப் 09, 2024 12:42 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் 13 வட்டார வேளாண் துறை சார்பில் 26 விவசாயிகளின் வயலில் பூச்சிநோய் கண்காணிப்பு திடல் அமைக்கப்பட உள்ளது.
வேளாண் துணை இயக்குநர் அமுதன் கூறியதாவது: அதிகளவு யூரியா இடுவது, லேசான பூச்சித் தாக்குதல் தென்பட்டாலே உடனடியாக மருந்து தெளிப்பதுதான் பயிர் இழப்புக்கு முக்கிய காரணம்.
விலை குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் பயிர்களுக்கு யூரியாவை அதிகமாக இடுகின்றனர். பச்சையத்துடன் பயிர் செழிப்பாக வளரும் போதே பூச்சித் தாக்குதல் தொடங்கி விடும்.
பூச்சி தென்பட்டவுடன் நேரடியாக ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் அவை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று அதிகமாக பெருகிவிடும். முதலில் வேப்பெண்ணெய், உயிர் உரங்கள் மூலம் அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதன் ஒரு முயற்சியாக பூச்சிநோய் கண்காணிப்பு திடல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. வட்டாரத்தில் ஒரு கிராமத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் பயிர் சாகுபடி செய்யும் 2 வயலை தேர்வு செய்ய வேண்டும்.
விதைப்பு முதல் அறுவடை வரை காலநிலைகளை ஆய்வு செய்ய வேண்டும். காற்றின் வேகம், ஈரப்பதம், மழையளவு, மழை பெய்த நாட்கள், தட்பவெப்பநிலையை ஆய்வு செய்து எந்த பருவத்தில் பூச்சி, நோய் தாக்குதல் வருகிறது என கண்காணிக்க வேண்டும்.
வயலில் குறிப்பிட்ட அளவு சாகுபடி பரப்பை தேர்வு செய்து அதில் பூச்சிகளின் தாக்குதலை ஆய்வு செய்ய வேண்டும்.
பொருளாதார சேத மதிப்பை தாண்டும் வகையில் இருந்தால் விவசாய கல்லுாரி விஞ்ஞானிகளை வரவழைத்து ஆலோசனையும் பரிந்துரையும் பெற வேண்டும். அதன்பின்பே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க அறிவுறுத்த வேண்டும். இவற்றை வேளாண் அலுவலர்கள் கண்காணித்து ஒவ்வொரு நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்து அனுப்பினால் அதற்கேற்ப மருந்து மற்றும் நோய்க்கான பரிந்துரை செய்ய முடியும் என்றார்.

