/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சேதமடைந்த மடைகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
சேதமடைந்த மடைகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 02, 2024 06:13 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் உள்ள கண்மாய்களின் மடைகள் சேதமடைந்துள்ளதால், பருவமழைக் காலத்திற்கு முன்பு சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பேரையூர், எழுமலை, டி.கல்லுப்பட்டி, அத்திப்பட்டி, சேடப்பட்டி, மோதகம் பகுதிகளில் பருவ காலங்களில் நெல், சோளம், மிளகாய், பாசி வாழை, கரும்பு, கத்தரி பருத்தி, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இவற்றில் பெரும்பான்மையான பயிர்கள் கிணற்றுப் பாசனத்தை நம்பியே பயிரிடப்படுகின்றது.
கண்மாய்களில் தண்ணீர் இருந்தால் கிணற்றில் தண்ணீர் இருக்கும். இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.
சமீபத்தில் பெய்த கோடை மழைக்கு பெரும்பான்மையான கண்மாய்களுக்கு, தண்ணீர் வந்தும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ஏனெனில் பல கண்மாய்களில் கரை பலவீனமாக உள்ளதாலும், மடைகள் சேதம் அடைந்து இருப்பதாலும் தண்ணீர் தேங்காமல் வீணாக வெளியேறி விடுகின்றது.
இதனால் மழை பெய்தும் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுவதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
இப்பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களையும் ஆய்வு செய்து மடைகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.