/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாதுகாப்பான டிஜிட்டல் திரை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம்: தினமலர் நாளிதழ் நடத்திய கண், மனநலம் காக்கும் கருத்தரங்கில் வலியுறுத்தல்
/
பாதுகாப்பான டிஜிட்டல் திரை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம்: தினமலர் நாளிதழ் நடத்திய கண், மனநலம் காக்கும் கருத்தரங்கில் வலியுறுத்தல்
பாதுகாப்பான டிஜிட்டல் திரை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம்: தினமலர் நாளிதழ் நடத்திய கண், மனநலம் காக்கும் கருத்தரங்கில் வலியுறுத்தல்
பாதுகாப்பான டிஜிட்டல் திரை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம்: தினமலர் நாளிதழ் நடத்திய கண், மனநலம் காக்கும் கருத்தரங்கில் வலியுறுத்தல்
ADDED : செப் 02, 2024 06:30 AM

மதுரை: டிஜிட்டல் திரை பயன்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மதுரையில் அம்மாக்கள், குழந்தைகளுக்காக தினமலர் நாளிதழ் நடத்திய கண், மனநலம் காப்பது தொடர்பான கருத்தரங்கில் கண் சிறப்பு மருத்துவர் எஸ். சீனிவாசன் அறிவுறுத்தினார்.
மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் தினமலர் வெளியீட்டாளர் முனைவர் எல்.ராமசுப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் 'பள்ளிக் குழந்தைகளின் கண்களை கவனமாக காப்பது எப்படி' என ஸ்ரீராம் சந்திரா கிளினிக் கண் சிறப்பு மருத்துவர் எஸ்.சீனிவாசன் பேசியதாவது:
படிக்கும் மாணவர்களுக்கு கண் பாதுகாப்பு அவசியம். கோவிட் தாக்கத்திற்கு பின் டிஜிட்டல் திரையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இது கண் பாதுகாப்பிற்கு பெரிய சவாலாக உள்ளது. அலைபேசியை அதிக நேரம் பயன்படுத்தும் போது அதிலுள்ள 'புளூ லைட்' மூலம் வெளியேறும் கதிர்வீச்சு கண்களை அதிகம் தாக்கும். அது கெடுதலை ஏற்படுத்தும். குறிப்பாக துாங்குவதற்காக இரவில் மட்டும் சுரக்கும் 'மெலடோனின்' ஹார்மோன் சுரப்பதில் தடை ஏற்படும். தேவைப்படும் ஆக்சிஜன் அளவும் குறையும். இதனால் துாக்கம் கெடும். கண்கள் பாதிப்பதுடன் மறுநாள் கடும் சோர்வு ஏற்பட்டு பணிகள் பாதிக்கும்.
நீண்ட நேரம் அலைபேசி, கம்ப்யூட்டர்கள் போன்ற டிஜிட்டல் திரைகளை பயன்படுத்தும் போது அடிக்கடி கண்களை சிமிட்டுவது அவசியம். இதன் மூலம் கண்களுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். அதுபோல் கண்களை தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இது கருவிழிகளை பாதிக்கும். நம் வாழ்க்கை முறையால் இயற்கையாக சூரியஒளியில் இருந்து கிடைக்கும் 'விட்டமின் டி' சத்து குறையும் போதும் கண் பாதிப்பு ஏற்படும். ஆன்லைன் படிப்புகள், வேலை என தவிர்க்க முடியாத காரணத்தால் 'கோவிட்' பாதிப்புக்கு பின் கண்கள் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் 2050 ல் நுாற்றுக்கு 50 பேர் கண்ணாடி அணியும் சூழல் ஏற்படும்.
பெற்றோர் குழந்தைகளுக்கு 'ரோல் மாடலாக' இருந்து அவர்கள் முன் அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பாதிப்பால் துாக்கம் கெடும். துாக்கம் கெட்டால் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். ஒவ்வொரு வயதிலும் எத்தனை மணிநேரம் அலைபேசியை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதுபோல் படிக்கும் போது சரியான ஒளியிலும், உரிய கோணத்தில் அமர்வதும் அவசியம். 20 நிமிடங்கள் படித்தால் 20 நொடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். சரியான உணவு மிக அவசியம். பார்வையில் பாதிப்பு ஏற்படும் போதே கண்ணாடி அணிவதால் சரியான பார்வையை பெற முடியும். தாமதமாக அணிந்தால் பார்வையில் சிக்கல் ஏற்படும். காலை எழுந்தவுடன் அதிக தண்ணீர் அருந்த வேண்டும்.
'அன்னப்பறவை'யாக மாறுங்கள்
'தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது எப்படி' என்ற தலைப்பில் ஹர்ஷா மருத்துவமனை மனநல மருத்துவர் எஸ். சிவசங்கரி பேசியதாவது:
மாணவர்கள் நலன், சமூக பார்வையுடன் கருத்தரங்கை ஏற்பாடு செய்த தினமலர் நாளிதழ் பாராட்டுக்குரியது. சிந்தனை, செயல்பாடு, உணர்ச்சிகள் இவை மூன்றும் சேர்ந்தது தான் 'மைன்ட்' (மனம்). இவை சரியாக இருந்தால் நம் மூளையும் சரியாக இயங்கும். இன்றைய இளைஞர்கள் அதிக உணர்ச்சிவயப்படுபவர்களாக உள்ளனர். அவர்களுக்கு கல்வி மூலம் தான் எதையும் செய்ய முடியும் என்பதை உணர்த்த வேண்டும். அந்த கல்வி தனித்திறமைகளை வளர்ப்பதாகவும், பகுத்தாய்வு செய்வதாகவும் இருத்தல் வேண்டும். படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் வாழ்க்கை திறன் கல்வியில் சாதிக்க முடியாமல் போகின்றனர்.
இன்றைய மாணவர்களுக்கு அலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்டவை பெரும் சவாலாக உள்ளன. இதற்கிடையே தான் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் சூழல் உள்ளது. குறிப்பாக, சரியான நேரத்தை கடைபிடிப்பது, வழக்கமாக படிப்பது செயல்படுவதை விட கூடுதல் நேரம் ஒதுக்குவது, 'பாசிட்டிவ்' சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். தற்போது 80 சதவீதம் பேர் 'நெகட்டிவ்' சிந்தனையுடன் உள்ளனர். இது பெண்களுக்கு மிக அதிகம்.
மாணவர்கள் இரவில் அதிக நேரம் விழித்திருக்க கூடாது. இதனால் ஹார்மோன் சுரப்பிகள் பாதிக்கும். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். படிப்பை தவிர 30 நிமிடங்கள் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் புத்தகங்களை படிக்க வேண்டும். ஆசிரியர், பெற்றோர் தான் சிறப்பானவர்கள் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். இவற்றின் மூலம் தான் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.
இன்றைய சூழலில் இணையதளத்தை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாதுதான். ஆனால் 'அன்னப்பறவை' போல் நல்ல விஷங்களை மட்டும் மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு முன் பெற்றோர் 'ரோல் மாடலாக' உருவாக வேண்டும். 'பேமிலி டைம்' ஏற்படுத்தி குடும்ப உறுப்பினர்களுடன் பேசி அதிக நேரம் செலவிட வேண்டும்.
'அன்பின் மொழி'யால் பேசுங்கள்
'தன்னம்பிகையை வளர்த்துக்கொள்வது எப்படி' என எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் எம்.கண்ணன் பேசியதாவது:
நாம் முதலில் மனம் விட்டு பாராட்டும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரை பாராட்டினால் அவர் நாம் சொல்வதை கவனிப்பது அதிகரிக்கும். இதனால் குழந்தைகளை முடிந்தளவு பாராட்டுங்கள். 'பாசிட்டிவ்' சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை 'அமில வார்த்தைகளால்' பேசுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
அவர்களை திட்டும் போது தான் அவர்களின் எண்ணம் அலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் பயன்பாட்டிற்கு மாறுகிறது. கொரோனா தாக்கத்திற்கு பின் மாணவர்களின் அலைபேசி பயன்பாடு அதிகரித்து தற்போது வழக்கமாகி விட்டது.
நாம் சந்தோஷமாக இருந்தால் தான் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும் என்ற எண்ணம் வேண்டும். வாழ்க்கையின் நோக்கத்தை மகிழ்ச்சியானதாக மாற்றிக்கொள்ள வேண்டும். யாரெல்லாம் நமக்கு மகிழ்ச்சியை தருகிறார்களோ அவர்களைத்தான் நமக்கு பிடிக்கும். இதுதான் குழந்தைகளின் விஷயத்திலும் நடக்கும்.
'நெகட்டிவ்'ஆக பேசுவோரிடம் யாரும் பேச மாட்டார்கள். இதற்கு காரணம் பெற்றோரின் நடத்தை தான். பரிசு வழங்குவது, உதவி செய்வது, நேரத்தை சரியாக செலவிடுதல், பாராட்டுவது போன்றவற்றை 'அன்பின் மொழி' என்கின்றனர். பெற்றோர் இந்த அன்பின் மொழியை குழந்தைகளிடம் காண்பிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாததை நாம் செய்தால் இருவருக்குமான இடைவெளி அதிகரிக்கும்.
எந்த மதத்தை சேர்ந்தோர் என்றாலும் காலை எழுந்தவுடன் குழந்தைகளை சுவாமி கும்பிட வைத்து பழக்குங்கள். தற்போது சோஷியல் மீடியாக்களில் மூழ்கி உடல்ரீதியிலான செயல்பாடுகளில் குழந்தைகள் ஈடுபடுவது குறைந்து வருகிறது. பெற்றோர் அதிக நேரம் குழந்தைகளிடம் செலவிட்டு அவர்களுடன் அன்பின் மொழியால் பேசுங்கள். இதை பெற்றோர் சரியாக செய்யாவிடில் வயதானபின் நீங்கள் முதியோர் இல்லங்களுக்கு செல்ல நேரிடும். குழந்தைகளுக்கு 'உன்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கையை வளர்க்கும் விஷயங்களை கற்றுக்கொடுத்து பாராட்டுங்கள். பெற்றோர் குழந்தைகளின் நண்பனாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பேசினர்.