ADDED : ஆக 13, 2024 05:55 AM

மேலுார் : சருகுவலையபட்டியில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் வேருடன் சாய்ந்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது
மேலுார் தாலுகாவின் பல பகுதிகளில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக வாழை உள்ளது. சென்னகரம்பட்டி, மேலவளவு பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். சில நாட்களாக இப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் வாழை மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க மரங்களுக்கு முட்டு கொடுத்தும் வாழை மரங்கள் சாய்கின்றன. நேற்றுமுன்தினம் சருகுவலையபட்டியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
விவசாயி சின்னகருப்பன் கூறியதாவது:
கடன் வாங்கி ரூ.38 ஆயிரம் செலவு செய்து அரை ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளேன். எட்டு மாதங்கள் முடிந்த நிலையில் குலைதள்ளிய வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விட்டது. வாங்கிய கடனை கட்ட முடியாமல் திகைத்துவிட்டேன். தோட்டக்கலை, வருவாய் துறையினர் ஆய்வு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

