ADDED : ஆக 05, 2026 06:12 PM
வருவாயை பெருக்கும் திட்டங்கள் இல்லை
பேராசிரியர் தீனதயாளன், பொருளியல் துறை, மதுரைக் கல்லுாரி:
முந்தைய 2025 பட்ஜெட்டை ஒப்பிடுகையில் பள்ளிக்கல்வி, உயர் கல்விக்கான ஒதுக்கீடு குறைவாக உள்ளது. 2027-28 கல்வியாண்டில் மதுரையில் 300 மாணவர் சேர்க்கையுடன் சட்டக் கல்லுாரி அமைவது தென் மாவட்ட அளவில் பயன்தரும். 9 –பிளஸ் 2 மாணவர்களுக்கு நவீன உண்டு, உறைவிட பள்ளிகளுக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றும். உயர்கல்விக்கு குறைவான ஒதுக்கீடு அரசு பல்கலைகள், அரசு, உதவிபெறும் கல்லுாரிகளுக்கான சம்பளம்,
ஓய்வூதியம் போன்றவற்றிற்கு மட்டுமே இருக்கும். புதிய வேலை வாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை. தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதிய ஊதிய திட்டத்திற்கு எந்த ஒதுக்கீடும் இல்லை. மொத்தத்தில், வருவாய் ஆதாரங்களை பெருக்கும் திட்டங்கள் இல்லை.
பெண்களை கவரும் திட்டங்கள் ஏராளம்
சத்யா, குடும்பத்தலைவி
த.வெ.க., ஆட்சியின் முதல் பட்ஜெட்டில் பெண்களை கவரும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அண்ணன் சீர் திட்டத்தில் பெண்களின் திருமண நாளின் 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்குவதற்கு ரூ. 812 கோடி ஒதுக்கீடு, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ. 560 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டம், மண்ணின் மகள் திட்டம், விதவை, ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 100 சதவீதம் மானியத்தில் ஆடுகள் வழங்கும் வெற்றி மகளிர் திட்டங்கள் பெண்களை கவர்வதாக உள்ளன.
சமூகப் பொருளாதாரம் மேம்படும்
முன்னாள் பேராசிரியர் முத்துராஜா, செயற்குழு உறுப்பினர், இந்திய பொருளாதாரக் கழகம்:
இப்பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி., மக்கள், மத சிறுபான்மை மக்கள் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், மாணவர்களுக்கு லேப்டாப், முதியோர் நல திட்டங்கள் நல்ல பலனைத் தரும். கிராமப்புற பெண்கள் மேம்பட விலையில்லா மாடுகள், ஆடுகள் திட்டம், கிராமப்புற வீடுகள் மேம்பாட்டு திட்டம், மீனவர்கள் நலத்திட்டம் போன்றவை சிறப்பானவை.
நதி சார்ந்த சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள், இளைஞர்களுக்கான தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு திட்டங்கள், பெண்கள் சுயஉதவி குழுக்கள் நிதி உதவி திட்டங்கள் நீடித்த நிலைத்த வளர்ச்சியை தரும். இவை சமூக நீதி நிலைப்படுத்தவும், மக்கள் நலன் சார்ந்த சமூக பொருளாதார வளர்ச்சி பெறவும் துணைபுரியும்.
மதுரைக்கு ஏதும் இல்லையா
பாலமுருகன் பழனி, மதுரை உட்கட்டமைப்பு வளர்ச்சிக் குழுமத் தலைவர்
தமிழக பட்ஜெட்டில் மதுரையில் செயற்கை நுண்ணறிவு பல்கலை, புதிய பெரிய சிப்காட் தொழிற்பேட்டை, மதுரை–தூத்துக்குடி தொழில் வழித்தடத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள், மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மாநிலத்தின் தொடர்ச்சியான முன்னுரிமை, நகரின் மையப்பகுதியில் உள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கை நகருக்கு வெளியே மாற்றும் திட்டம் போன்ற திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. மதுரை இன்று தென் தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையமாக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப பெரிய முதலீடுகள், உள்கட்டமைப்பு திட்டங்களை அரசு அறிவிப்பது அவசியம்.
