/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாட்டு வண்டி பந்தயம்: டி.ஜி.பி.,நிபந்தனைக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மாட்டு வண்டி பந்தயம்: டி.ஜி.பி.,நிபந்தனைக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மாட்டு வண்டி பந்தயம்: டி.ஜி.பி.,நிபந்தனைக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மாட்டு வண்டி பந்தயம்: டி.ஜி.பி.,நிபந்தனைக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 25, 2024 03:59 AM
மதுரை : மாட்டு வண்டி பந்தயத்திற்கு நிபந்தனைகள் விதித்து டி.ஜி.பி.,பிறப்பித்த சுற்றறிக்கையை பின்பற்றத் தேவையில்லை. பழைய நடைமுறையை பின்பற்றி அனுமதி வழங்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
தமிழ்நாடு பாரம்பரிய வீரவிளையாட்டு மாட்டுவண்டி காளைகள் நலச் சங்கம் மாநில தலைவர் கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பாரம்பரிய பழக்க,வழக்கங்களின் வரலாறு, சமூக, கலாசார முக்கியத்துவத்தை உணர்த்த மாட்டு வண்டி பந்தயங்கள் நடக்கின்றன. இதற்கு அனுமதி வழங்க நிபந்தனைகள் விதித்து தமிழக டி.ஜி.பி., மார்ச் 7ல் சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் பந்தயம் நடத்தக்கூடாது. கிராம சாலைகள் அல்லது காலி மைதானம் அல்லது மண் பாதையில் நடத்த வேண்டும்.
தமிழக கிராமங்களில் பல சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் கிராம சாலைகளில் பந்தயங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிபந்தனைகள் ஏற்புடையதல்ல.நெடுஞ்சாலைகளில் பந்தயம் நடத்தக்கூடாது என நிபந்தனை விதித்துவிட்டு, அதே துறையின் அதிகாரிகளிடமிருந்து விழா அமைப்பாளர்கள் தடையில்லாச் சான்று பெற நிபந்தனை விதித்தது முரணானது.
நெடுஞ்சாலைகளில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த எவ்வித தடையையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை.
இந்நிபந்தனைகள் தமிழ்நாடு விலங்குகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நடத்துதல்) விதிகளில் இல்லை. அதிகாரிகளால் புதிய விதிகளை சட்டமாக்க முடியாது. நிபந்தனைகளை வெளியிட டி.ஜி.பி.,க்கு அதிகாரம் இல்லை.
விலங்குகள் வதை தடுப்பு சட்டப்படி நிபந்தனைகள் விதிக்க, விதிகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது. டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மாட்டு வண்டி பந்தயம், ரேக்ளா ரேஸ், குதிரை பந்தயத்திற்கு அனுமதி கோரி யாரும் விண்ணப்பித்தால் பழைய நடைமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் அனுமதிக்கலாம். டி.ஜி.பி.,பிறப்பித்த சுற்றறிக்கையிலுள்ள நிபந்தனைகளை பின்பற்றத் தேவையில்லை. தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., ஜூன் 18 ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

