/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரோடுகளை மேம்படுத்த சென்னை போல் 'சிட்டி ரோட்ஸ்' : நெடுஞ்சாலைத்துறையில் தனிப்பிரிவு அமையுமா
/
மதுரை ரோடுகளை மேம்படுத்த சென்னை போல் 'சிட்டி ரோட்ஸ்' : நெடுஞ்சாலைத்துறையில் தனிப்பிரிவு அமையுமா
மதுரை ரோடுகளை மேம்படுத்த சென்னை போல் 'சிட்டி ரோட்ஸ்' : நெடுஞ்சாலைத்துறையில் தனிப்பிரிவு அமையுமா
மதுரை ரோடுகளை மேம்படுத்த சென்னை போல் 'சிட்டி ரோட்ஸ்' : நெடுஞ்சாலைத்துறையில் தனிப்பிரிவு அமையுமா
ADDED : ஆக 31, 2024 05:56 AM
மதுரை : தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்துறை கோட்டங்கள் செயல்படுகின்றன. ரோடுகள், பாலங்கள் போன்ற கட்டுமான பணிகளை இத்துறையினரே பராமரிக்கின்றனர். மதுரை கோட்டத்தில் மதுரை வடக்கு, தெற்கு, மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, பேரையூர் என 7 உதவி கோட்டங்கள் செயல்படுகின்றன.
ஒரு கோட்ட பொறியாளரின் கீழ் 7 உதவி கோட்ட பொறியாளர்கள், அவர்களின் கீழ் உதவிப்பொறியாளர்கள் என பணியாற்றுகின்றனர். மதுரை நகரில் கடந்த பத்தாண்டுகளில் ஏராளமான பாலங்கள், ரோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது திருநகர், பாலமேடு, சிவகங்கை, அருப்புக்கோட்டை ரோடுகளின் விரிவாக்கப்பணிகள், கோரிப்பாளையம், மேலமடை சந்திப்புகளில் மேம்பாலங்கள் என பல பணிகள் நடக்கின்றன. இவை மதுரை நகருக்குள் நடப்பதால் இப்பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
மேலும் நெல்பேட்டை - அவனியாபுரம், சிம்மக்கல் - பெரியார் பஸ்ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி பகுதியில் மேம்பாலம், வைகை வடகரையில் பாத்திமா கல்லுாரி முதல் - சமயநல்லுார் வரையான ரோடு போன்ற பெரிய திட்டங்களும் அடுத்தடுத்து தயாராகி வருவதால் பெரிய அளவில் போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. எனவே நெடுஞ்சாலைத் துறையில் பெரிய மாநகராட்சிக்கென தனிப்பிரிவு செயல்பட்டால் பணிகள் எளிதாகி, குறித்த காலத்திற்குள் நகருக்குள் ரோடுகள் 'பளபள'க்கும்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுபோன்ற ரோடு பணிகளுக்காக நெடுஞ்சாலைத் துறையில் 'சிட்டி ரோட்ஸ்' என தனிப்பிரிவே செயல்படுகிறது. இப்பிரிவுக்கென தனி கோட்ட அதிகாரிகள், உதவி கோட்ட அதிகாரிகள், உதவிப்பொறியாளர்கள் உட்பட தேவையான கட்டமைப்புடன் செயல்படுகிறது. அதுபோல தமிழகத்தில் பிற பெரிய மாநகராட்சி பகுதிகளான மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் தனிப்பிரிவு செயல்பட வேண்டும்.
இதன் மூலம் தற்போது மாவட்டத்திற்கு கிடைக்கும் நிதிஒதுக்கீடு கூடுதலாக கிடைக்கும். ரோடு, மேம்பால கட்டமைப்புகள் சிறப்படையும்.