/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இழப்பீட்டு நிவாரணம் இன்னும் வழங்கவில்லை
/
இழப்பீட்டு நிவாரணம் இன்னும் வழங்கவில்லை
ADDED : ஆக 13, 2024 05:59 AM

மதுரை : கடந்தாண்டு ஒரு போகத்திற்கு தாமதமாக தண்ணீர் திறந்ததால் பருவம் தவறி பெய்த மழையில் நெற்பயிர்கள் சேதமடைந்தன.
தற்போது வரை அதற்கான இழப்பீடு வழங்கவில்லை என வைகை திருமங்கலம் பிரதான பாசன கால்வாய் நீரினை பயன் படுத்துவோர் சங்கத் தலைவர் ராமன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மேலுாருக்கு 85ஆயிரம் ஏக்கர், திருமங்கலத்திற்கு 19ஆயிரத்து 500 ஏக்கர் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் தேவை. கடந்தாண்டு ஒரு போக சாகுபடிக்கு ஒன்றரை மாத காலம் தாமதமாக தண்ணீரை திறந்தனர். வைகை அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் மழை பெய்யாது என்று சொல்லி தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி சாகுபடியை நஷ்டமாக்கினர்.
பருவம் தவறி பெய்த மழையால் செல்லம்பட்டி, உசிலம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், மேலுார், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டியில் பலநுாறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நிலத்திலேயே முளைத்து வீணாகி விட்டது. மழை பெய்ததால் வைக்கோல் கூட மிச்சப்படாமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். அதற்கு தற்போது வரை நிவாரணத் தொகை வழங்கவில்லை.
வழக்கமாக ஒருபோகத்திற்கு செப்.,15ல் தான் தண்ணீர் திறக்கப்படும். அதுவரை காத்திருந்தால் தண்ணீர் எங்களுக்கு கிடைக்காமல் வீணாகி விடும். தற்போது தொடர் மழை பெய்வதால் நாற்றாங்கால் பணிகளை தொடங்குவதற்கு உதவியாக ஒருபோக சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீரை திறக்க வேண்டும் என்றார்.

