/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுாறுநாள் வேலைக்கு ரூ.2 ஆயிரம் கேட்பதாக குறைதீர் கூட்டத்தில் புகார் துணை மேயர் மீதும் குற்றச்சாட்டு
/
நுாறுநாள் வேலைக்கு ரூ.2 ஆயிரம் கேட்பதாக குறைதீர் கூட்டத்தில் புகார் துணை மேயர் மீதும் குற்றச்சாட்டு
நுாறுநாள் வேலைக்கு ரூ.2 ஆயிரம் கேட்பதாக குறைதீர் கூட்டத்தில் புகார் துணை மேயர் மீதும் குற்றச்சாட்டு
நுாறுநாள் வேலைக்கு ரூ.2 ஆயிரம் கேட்பதாக குறைதீர் கூட்டத்தில் புகார் துணை மேயர் மீதும் குற்றச்சாட்டு
ADDED : ஆக 06, 2024 05:09 AM

மதுரை: 'ஓ.ஆலங்குளம் ஊராட்சியில் நுாறு நாள் பணிக்கு பதிவு செய்ய ரூ.2 ஆயிரம் கேட்பதாக' குறைதீர் நாள் கூட்டத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்.
மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், சமூகநலத்திட்ட பாதுகாப்பு அலுவலர் சங்கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு செயற்கை கால்களை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன், காப்பீடு திட்ட அலுவலர் அருண், தொடர்பு அலுவலர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் ஒன்றியம் ஓ.ஆலங்குளம் பெண்கள், ஊழலுக்கு எதிரான தமிழ்ப் போராளிகள் அமைப்பின் தலைவர் குணசேகரன் தலைமையில் அளித்த மனுவில், ''நுாறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்ற, பதிவு செய்ய மறுக்கின்றனர். ரூ.2 ஆயிரம் வழங்குவோருக்கே அட்டை வழங்க புதிய சட்டம் வந்திருப்பதாக கூறுகின்றனர். அப்படி சட்டம் இருந்தால் தொகையை எப்படி வழங்குவது' எனக்கேட்டு மனு கொடுத்தனர்.
கருப்பாயூரணி வரைவாளர் நகர் பகுதியினர் அளித்த மனுவில், ''எங்கள் பகுதியில் 5 வீதிகள் உள்ளன. தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகள் இல்லை.
இருளில் போதைப் பொருளை பயன்படுத்துவோர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை இல்லையென்றால் ஆக.8ல் காளிகாப்பான் ரோட்டில் மறியல் நடத்துவோம்'' என தெரிவித்துள்ளனர்.
ஜெய்ஹிந்துபுரம் வசந்தா அளித்த மனுவில், ''எனது வீடு தொடர்பாக வழக்கு உள்ளது. இதில் சாட்சிகளை விசாரிக்க உள்ள நிலையில், துணைமேயர் நாகராஜன், அவரது சகோதரர் எதிரிகளுக்கு ஆதரவாக எங்களை மிரட்டுகின்றனர்.
எங்களை தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக்கூறியுள்ளார்.
இதுகுறித்து துணைமேயர் நாகராஜன் கூறுகையில், ''யாரிடமும், எதையும் எதிர்பாராமல் மக்கள் பிரச்னைகளுக்கு நான் தீர்வு காண்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புகார் செய்துள்ளனர்.
எங்கள் கட்சியினர் எனது வீட்டருகே கூடிபேசும் இடத்தில் அவர்கள்தான் இடையூறு செய்தனர்.
எனது சகோதரர் மீது எச்சில் துப்பியது பற்றி கேட்க சென்றேன். அவர்கள் என்னை திட்டியதால் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தேன். நான் யாரையும் மிரட்டவில்லை. இதன் பின்னணியில் பா.ஜ.,வினர் சிலர் உள்ளனர்'' என்றார்.