/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கூட்டுறவுத்துறையில் ஆமை வேகத்தில் ‛ செயல்படும் 'கோர் பேங்கிங்' பணிகள்: சுணக்கத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்
/
கூட்டுறவுத்துறையில் ஆமை வேகத்தில் ‛ செயல்படும் 'கோர் பேங்கிங்' பணிகள்: சுணக்கத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்
கூட்டுறவுத்துறையில் ஆமை வேகத்தில் ‛ செயல்படும் 'கோர் பேங்கிங்' பணிகள்: சுணக்கத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்
கூட்டுறவுத்துறையில் ஆமை வேகத்தில் ‛ செயல்படும் 'கோர் பேங்கிங்' பணிகள்: சுணக்கத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள்
UPDATED : அக் 11, 2024 07:39 AM
ADDED : அக் 11, 2024 07:16 AM

மதுரை: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நிரந்தர கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் இல்லாததால் தற்போது வரை ஒரே சர்வர் மூலம் நடைபெறும் 'கோர் பேங்கிங்' இணைப்பு தாமதமாகிறது.
தமிழகத்தில் 4400 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. மாநில கூட்டுறவு வங்கியின் கீழ் அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட தலைமை வங்கி, அதன் கிளைகள் ஒரே சர்வர் மூலம் 'கோர் பேங்கிங்' இணைப்பில் உள்ளன. இதன் மூலம் எந்த ஒரு வங்கி கிளையின் எல்லா கணக்குகளையும் ஆன்லைன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே சரிபார்க்க முடியும்.
விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கி கிராமப்புறங்களுக்கு அதிக சேவை செய்யும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் தற்போது தான் கையால் எழுதித் தரும் ரசீது முறையில் இருந்து மாறியுள்ளன. 2013 முதல் அனைத்து சங்கங்களிலும் கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படுகிறது. ஆனால் அந்தந்த சங்கத்தின் கணக்குகள் அங்குள்ள கம்ப்யூட்டரில் மட்டுமே சேகரிக்க முடியும். அதை சர்வர் மூலம் மற்றவர்கள் கண்காணிக்க முடியாது.
தற்போது நபார்டு மூலம் 'கோர் பேங்கிங்' சேவைக்கு மாறுவதற்கான தொழில்நுட்பம் கடன் சங்கங்களில் செயல்படுத்தப்படுகிறது. 2024 மார்ச் 31 வரையான கணக்குகள் பழைய 'காமன் அக்கவுண்டிங் சிஸ்டம்' முறையில் இருந்து 'கோர் பேங்கிங்' முறைக்கு மாற்றப்பட்டாலும் முழுமையாக ஆன்லைன் முறையில் செயல்படவில்லை.
கடன் சங்கங்களில் 'அவுட்சோர்சிங்' முறையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் மிகக்குறைந்த சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடன் சங்கங்களில் உள்ள செயலர் உட்பட பிற பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றிய கல்வியறிவு குறைவாக இருப்பதால் இவர்களைச் சார்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. இதனால் 'கோர் பேங்கிங்' பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) கூட்டுறவுப் பதிவாளருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
சங்க நிர்வாகிகள் கூறுகையில் 4400 சங்கங்களில் 4000 பேர் பல ஆண்டுகளாக குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களாக உள்ளனர். அவர்களை பணி நிரந்தரப்படுத்தி பொறுப்புகளை ஒப்படைத்தால் தவறுகளுக்கு இடமின்றி கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகளை எளிதாக்கலாம். மற்ற பணியாளர்களுக்கு பணிப்பளு குறையும். இவர்கள் மூலம் 'கோர் பேங்கிங்' இணைப்பும் எளிதில் சாத்தியமாகும்' என்றனர்.